Ad Widget

நீதியையும், ஜனநாயகத்தினையும் நிலைநாட்ட மாணவர்கள் ஒன்றுபட வேண்டும்!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், அமெரிக்க மக்களும் உதவ காத்திருக்கின்றார்கள், எனவே, இந்த நாட்டில் நீதியையும், ஜனநாயகத்தினையும் நிலைநாட்ட மாணவர்கள் ஒன்றுபட வேண்டுமென அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

samantha

நேற்று யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அவர், யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் அமெரிக்க அரசாங்கத்தின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட விஞ்ஞானம் மற்றும் பௌதீகவியல் பிரிவு கட்டிடத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். ஒஸ்மானியாக் கல்லூரி யாழ். முஸ்லிம்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு இடம். அண்மையில், ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்கள் தங்கியிருந்த ஓர் இடம். இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இன்னும் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்கின்றார்கள்.

அத்துடன், பாரிய தடைகளை ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் தகர்த்தெறிய முடியும். இது ஒஸ்மானியாக் கல்லூரி எவ்வளவு தடைகளை கடந்து வந்துள்ளது என்பதனைக் காட்டுகின்றது.

எதிர்காலத்தினைக் கொண்டாடக் கூடிய அதேவேளை, உங்களால் கடந்த காலங்களையும் மறந்து விட முடியாது. கடந்த 25 வருடங்களுக்கு முன்பு தமது இடங்களை விட்டு வெளியேற பணிக்கப்பட்டது.

அதனால் ஏற்பட்ட பாதிப்பு கட்டிடங்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் ஏற்பட்டது. மக்கள் பட்ட துன்பங்கள் இன்றும் மக்கள் மத்தியில் உணரப்படுகின்றது.

இன்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பிரதிநிதியாக இங்கு வருகை தந்துள்ளேன். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், அமெரிக்க மக்களும் உங்களுக்கு உதவ காத்திருக்கின்றார்கள். கட்டுமானப் பணியில் உங்களுடன் சேர்ந்திருக்கின்றார்கள்.

யாழ். ஒஸ்மானியாக் கல்லூரிக்கு உதவுவது அதில் முக்கிய செயற்பாடு, அது உங்களின் ஒளி மிகு எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். திடமான கல்வி உறுதியான நாட்டை கட்டி எழுப்ப உதவும். இங்கு கல்வியை உறுதிப்படுத்துவது முக்கிய பங்காக வகிக்கின்றது.

எதிர்காலத்தில் ஒன்றுபட்டு இருக்கவும், சமாதானத்தினை உருவாக்கவும் கல்வி எமக்கு வழி வகுக்கும். உங்களுக்கு உதவி செய்ய அமெரிக்க மக்கள் உங்களுடன் இருப்பார்கள்.

2008 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் பல பாடசாலைகளை புனரமைக்க உதவியுள்ளது.

இந்த நாட்டில் நீதியானதும், ஜனநாயகமானதுமான சமூகத்தினைக் கட்டி எழுப்ப நீங்கள் உழைப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

உங்கள் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும். உங்களின் கடமைகளை நீங்கள் செய்ய வேண்டும். அந்த உறுதியை நீங்கள் எனக்கு அளிப்பீர்களா என்றும் மாணவர்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவர்கள் ஆம் என அவருக்கு உறுதியளித்தனர்.

இதேவேளை சமந்தா பவர் நேற்று யாழ். பொது நூலகத்திற்கும் விஜயம் மேற்கொண்டார்.

பொது நூலகத்தில் தமிழர் கலாசார முறைப்படி யாழ். பொதுநூலகர் சுகந்தி சதாசிவமுர்த்தி மலர் மாலை அணிவித்து அவரை வரவேற்றார்.

நூலகத்தினை சுற்றிப் பார்வையிட்ட சமந்தா பின்னர் சுமார் 200 வருடங்களுக்கு மேலாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ஓலைச் சுவடிகளையும் பார்வையிட்டார்.

அதன் பின்னர், கருத்து தெரிவிக்கையில், யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டது துன்பமான ஒரு விடயம். தமிழ் மக்களின் கலாசாரத்தினை எதிர்காலத்தினை கட்டி எழுப்புவதற்கு கடந்த கால வரலாறுகள் அனைவருக்கும் முக்கியமானது.

அதனால் தான் யாழ். நூலகம் எரியூட்டப்பட்டது மிகவும் கடினமான சம்பவம். யாழ். நூலகம் எரிக்கப்பட்டதற்கு முழு உலகமே வருத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் யாழ். நூலகத்தின் ஊடாக தமது கலாசாரத்தினையும், வரலாற்றினையும் இழந்துள்ளார்கள். அந்த அழிவுகளில் இருந்து அபிவிருத்தி அடைந்து வந்தமைக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

எதிர்கால சந்ததியினருக்கு, எதிர்காலத்தினை நோக்கி பயணிப்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பத்தினை அளித்துள்ளமையை எண்ணி பெருமைப்படுகின்றேன் என்றார்.

பொதுநூலகம் என்பது படிக்கின்ற மற்றும் வாசிக்கின்ற விடயம் அல்ல. சமூகத்தினைக் கட்டி எழுப்பும் ஒரு நிறுவனம், யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த ஒவ்வொரு சமூகத்தினரும் கூடி எமது வரலாறு எப்படி இருக்குமென்று புரிந்து கொண்டு எதிர்காலத்தினை மிகவும் திடகாத்திரமாக கட்டி எழுப்புவதற்கு யாழ். பொது நூலகம் நிச்சயமாக உதவுகின்றது.

200 வருடங்களுக்கு முன்னரான இந்த ஓலைச் சுவடிகளை பாதுகாப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் ஒரு தொகை நிதியினை அன்பளிப்புச் செய்வதாகவும் அவர் கூறினார்.

Related Posts