Ad Widget

நீதிமன்ற கட்டளையை சிவாஜிலிங்கம் மீறியதாக எவ்வாறு கேள்வி எழுப்ப முடியும்: ஸ்ரீகாந்தா வாதம்

நீதிமன்றத்தை அவமதித்து, நீதிமன்ற கட்டளையைக் கிழித்தெறிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிரான வழக்கு இன்று புதன்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கு விசாரணையின் போது சிவாஜிலிங்கம் சார்பாக என்.சிறிகாந்தா, எம்.றெமிடியஸ், என்.திருநாவுக்கரசு, வி.ரி. சிவலிங்கம், கே.பி.எஸ். வரதராஜா, ஏ. ராஜரெட்ணம், சர்மினி விக்னேஸ்வரன், எஸ். செலற்றின், கே. அபிமன்யூ ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

சட்டத்தரணி என்.சிறிகாந்தா வாதாடுகையில், “எந்த ஆர்ப்பாட்டத்தை நீதிமன்றம் தடை செய்ததே அந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவே இல்லை, இந்நிலையில் நீதிவானின் கட்டளையை மீறியதாக எவ்விதம் கேள்வி எழுப்ப முடியும்?” என கேள்வி எழுப்பினார்.

“யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் கடந்த மாதம் 18 ஆம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் நடத்தப்படவிருந்த நில சுவீகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை தடை செய்து யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த பகுதிக்கு சென்ற யாழ். பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா, இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனிடம் நீதிமன்ற உத்தரவை கையளித்திருந்தார்.

இந்த நீதிமன்றக் கட்டளையை அடுத்து குறித்த ஆர்பாட்டம் கலைக்கப்பட்டது. நிலைமை இவ்விதம் இருக்கையில் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு மாறாக செயற்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக குற்றப்புகார் அறிக்கை யாழ்.பொலிஸ் தலைமையப் பொறுப்பதிகாரி சமன் சிகேராவினால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தக் குற்றப் புகாரில் இலங்கை தண்டனைச் சட்டக் கோவை 185 ஆம் பிரிவின் கீழ் குற்றம் ஒன்றினை சிவாஜிலிங்கம் புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

யாழ். நீதிவானால் இடப்பட்ட கட்டளையை மீறி அக்கட்டளையினால் தடுக்கப்பட்ட செயல் ஒன்றை ஒருவர் செய்திருந்தால் மாத்திரமே இக்குற்றச்சாட்டைத் தொடுக்க முடியும்.

நீதிமன்றில் பொலிஸார் குற்றம் ஒன்று தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தால் குற்றச்சாட்டினை வடிவமைத்து அதனைக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு வாசித்துக் காட்டச் செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டியவர் நீதிவானே.
குற்றச்சாட்டை வடிவமைப்பதற்கு போதுமான அடிப்படைகள் இருந்தால் மாத்திரமே நீதிவான் இவ்விதம் செயற்பட முடியும்.
குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையில் 182 ஆம் பிரிவின் கீழ் இவ்விடையம் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஆர்பாட்டத்தை நீதிமன்றம் தடை செய்ததே அந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. நடைபெறவே இல்லை, இந்நிலையில் நீதிவானின் கட்டளையை சிவாஜிலிங்கம் மீறியதாக எவ்விதம் கேள்வி எழுப்ப முடியும்?” என சட்டத்தரணி சிறிகாந்தா விவாதித்தார்.

ஆகவே, இந்நீதிமன்றம் பொலிஸாரின் குற்றப்பத்திரிகை அறிக்கையை விசாரணை செய்து பிரதிவாதிகளின் வாதங்களை பரிசீலித்து இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இவ்வழக்கினை முடிவுக்கு கொண்டு வருமாறு சட்டத்தரணி சிறிகாந்தாவினால் மன்றில் கோரப்பட்டது.

இந்த வாதத்தின் முடிவில், யாழ்.பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி சமன் சிகேரா மன்றிக்கு சமூகம் தரமுடியாத காரணத்தை மன்றிக்கு ஏற்கனவே அறிவித்துள்ளாகவும் எதிர்வரும் 30 ஆம் திகதி சமன் சிகேரா நீதிமன்றில் ஆஜராகி தனது விளக்கத்தை அளிக்கு வேண்டும் எனவும் நீதவான் மா கணேசராசா உத்தரவிட்டதுடன் ஜூலை 30 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

யாழ்.பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி சமன்சிகேரா சார்பாக குற்றத் தடுப்பு பொலிஸ் சாஜன் பத்மசிறி மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts