Ad Widget

நீதிமன்றம் மீதான தாக்குதல் இனவாதமல்ல

யாழ். நீதிமன்றத்தின் மீது கடந்த புதன்கிழமை (20) மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலை இனவாதமாகக் கருதவில்லை. மக்களின் உணர்ச்சிவசப்பட்டே இந்த தாக்குதலை நடத்தினர்.

தென்னிலங்கை மக்களும் இதனை இனவாதத் தாக்குதலாகப் பார்க்க மாட்டார்கள். இனவாத எண்ணங்கள் அவர்களிடம் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ். அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனுடைய வீட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரேமஜயந்த, ‘நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் போன்ற சம்பவங்கள் இனிவருங் காலங்களில் நடைபெறக்கூடாது. சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு பொலிஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

‘எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஒரு கூட்டமைப்பை அமைத்து போட்டியிடவுள்ளோம். பழைய தலைமைகள் இல்லாமல் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலில் போட்டியிடவுள்ளோம். யாழ். மாவட்டத்தில் அங்கஜன் இராமநாதன் போட்டியிடவுள்ளார்.

பட்டதாரிகள், வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படும்’ என்றார்.

Related Posts