Ad Widget

நீதிமன்றம் தாக்குதல்; 34 பேருக்கு இன்று பிணை, இந்திய பிரஜைக்கு விடுதலை!

வித்தியாவின் படுகொலையினை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் நீதிமன்றம் தாக்கப்பட்டமை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 130 பேரில் 34 பேரை கடும் நிபத்தனையில் பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமையினைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் திகதி பல்வேறு போராட்டங்கள் யாழ்.நகரில் முன்னெடுக்கப்பட்டதுடன் அன்றைய நாள் முழு கதவடைப்புக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நீதிமன்றத்தில் 9 ஆவது சந்தேக நபரான சுவிஸ் குமார் என்பவரை ஆஜர்ப்படுத்துவதாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து இளைஞர்கள் பலர் திரண்டு நீதிமன்ற வளாகத்தில் கூடினர். பின்னர் குறித்த போராட்டம் வன்முறையாக மாற்றப்பட்டது. குறித்தவர்கள் நீதிமன்றத்தை தாக்கியதும் சிறைவாகனத்தையும் சட்டத்தரணிகளின் வாகனத்தையும் அடித்து சேதப்படுத்தினர்.

இதனையடுத்து 130 பேர் அன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 21ஆம் திகதி குறித்த 130 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மூன்று பிரிவுகளாக வழக்குத்தொடுக்கப்பட்டு அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அதன்படி கடந்த முதலாம், மூன்றாம், நான்காம் திகதிகளுக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் 40 பேரில் மாணவர்கள் ஐவர் உட்பட மேலும் ஒருவராக அறுவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஏனைய 34 பேருக்கும் பிணை மனு மன்றில் சட்டத்தரணிகளால் வழங்கப்பட்டதையடுத்து குறித்த வழக்கு இன்று மீண்டும் நீதவான் சிவகுமார் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே அனைவரையும் கடும்நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல மன்று அனுமதிவழங்கியது. சந்தேகநபர்களை தலா இரண்டு இலட்சம் பெறுமதியான 2 ஆட் பிணையில் செல்ல மன்று உத்தரவிட்டது.

அத்துடன் வதிவிட உறுதிப்படுத்தலை கிராமசேவகர் ஊடாக பிரதேச செயலரும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் பிணையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர்கள் ஒவ்வொருவாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ். பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணிமுதல் மதியம் 12 மணிக்குள் கையொப்பம் இடவேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த 34 பேரது நன்னடத்தை குறித்து அவதானிக்கப்படும் என்றும் எதிர்வரும் காலங்களில் ஏதாவது குற்றங்களில் ஈடுபட்டால் வழங்கப்பட்ட பிணை இரத்துச் செய்யப்படுவதுடன் வழக்கு முடிவுறும் வரை பிணை வழங்கப்படாது என்றும் நீதவான் மன்றில் எச்சரித்தார்.

பொலிஸாரின் விசாரணைகள் முடிவுறுத்தப்படாத நிலையில் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெறும் என்றும் குற்றவாளிகளாக கண்டறியப்படுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் மன்றில் தெரிவித்தார்.

மேலும் குறித்த வழங்கு எதிர்வரும் யூலை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை குற்றமற்றவர் என்று நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்படாததால் அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

Related Posts