Ad Widget

நீதிமன்றம் தாக்குதல்; யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் இடமாற்றம்

யாழ் மற்றும்  ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பலர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   பொலிஸ் மா  அதிபர் இலங்ககோனின் பணிப்புரைக்கமைய இந்த திடீர் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

 

அதன்படி யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் வீரசேகர சீதாவாக்கைபுர பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக இடமாற்றப்பட்டுள்ளார்.    அதேபோல சீதாவாக்கைபுர பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய  டபிள்யூ.கே.ஜெயலத் யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக  நியமிக்கப்பட்டுள்ளார்.      யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த வி.பாலசூரிய வவுனியாவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.    அதேவேளை வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.வூட்லர் யாழ். தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளர்.

இதேவேளை, ஊர்காவற்றுறை தலைமைப் பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.பெரேரா மன்னாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.    அத்துடன் யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.ஜே.ஏ.விஜயசேகர கிளிநொச்சிக்கு இடமாற்றப்பட்டு,  கிளிநொச்சியில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய டி.எஸ்.டி.வீரசிங்க யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.கே.ஏ.சேனரத்ன முல்லைத்தீவுக்கும்,  மன்னாரில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக இருந்த யு.ஏ.வி.பெர்னாண்டோ யாழ்ப்பாணத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.    மேலும் முல்லைத்தீவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எல்.ரந்தெனியவும் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

 

இதேவேளை,  புங்குடுதீவு சிறுமி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர்  யாழ் குடாவில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களும்  நேற்று முன்தினம்  நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவங்களை அடுத்தே இந்த திடீர் இடமாற்றங்கள் வழங்கப்பட்டிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts