Ad Widget

நீதிமன்றம் உத்தரவிட்டால் சாட்சியாளருக்கு பாதுகாப்பு வழங்குவோம்: எஸ்.எஸ்.பி

police-vimalasenaநெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் டானியல் றெக்ஷிசனின் கொலை வழக்கின் பிரதான சாட்சியாளரான அவரது சகோதரிக்கு தொலைபேசி அச்சுறுத்தல் விடுக்கப்படும் பட்சத்தில் நீதிமன்று உத்தரவு வழங்கினால் பாதுகாப்பு வழங்கப்படுமென யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன தெரிவித்தார்.

யாழ். தலைமைப்பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்ஷிசனின் சகோதரிக்கு தொலைபேசி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்ற வேளை பொலிஸார் முறைப்பாட்டினை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் முறைப்பாட்டை பொலிஸார் ஏற்றுக் கொள்ளவில்லை? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அச்சுறுத்தல் அல்லது ஏதாவது பிரச்சினைகள் என்று பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்றால், அதனை பொலிஸார் ஏற்று முறைப்பாட்டினை பதிவு செய்ய வேண்டும். முறைப்பாட்டினை பதிவு செய்யாது பொலிஸார் திரும்பி அனுப்ப முடியாது.

அவ்வாறு ஊர்காவற்துறை பொலிஸார் முறைப்பாட்டினை ஏற்க மறுத்திருந்தால் பொலிஸார் மீது நடவடிக்கை மேற்கொள்வேன். நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் டானியல் றெக்ஷிசனின் கொலையின் பிரதான சாட்சியாக விளங்கும் குறித்த பெண்ணுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, பொலிஸார் முறைப்பாட்டினை ஏற்க மறுத்தால், உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் முறையிடும்படியும் அவர் கூறினார்.

அவர்களும் ஏற்றுக் கொள்ளாவிட்டால், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் தெரிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த பெண் பொலிஸார் முறைப்பாட்டினை ஏற்றுக் கொள்ள தவறிய பின்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்ததுடன், முறைப்பாட்டின் பிரதியை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் காண்பித்ததை தொடர்ந்து பொலிஸார் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். ஏன் முதல் முறைப்பாட்டினை பதிவு செய்யவில்லை? பொலிஸார் கொலையாளிகளுக்கு உடந்தையாக இருக்கின்றார்களா? என்று மீண்டும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்.

மீண்டும் அவர் பதிலளிக்கையில்,

மனித உரிமைகள் ஆணைக்குழுவினால், தீர்வு கிடைக்காது. பொலிஸாரினால் மட்டுமே தீர்வு பெற்றுக் கொடுக்க முடியுமென்றும் கூறியதுடன், அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட பெண் ஒரு சட்டத்தரணியை தெரிவு செய்து, அந்த சட்டத்தரணியின் ஊடாக நீதிமன்றில் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிப்பாராயின் நீதிமன்றினால் குறித்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் தாம் பாதுகாப்பு வழங்கமுடியுமென்றும் அவர் மேலும் கூறினார்.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

இவரின் கொலை வழக்கு தொடர்பில் சந்தேகத்தின் பேரில், வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரனை டிசெம்பர் 3 ஆம் திகதி கொழும்பில் வைத்து பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்ததுடன், இது தொடர்பில் றெக்ஷிசனின் மனைவியும், ஜசிந்தன் என்ற இளைஞனும் ஊர்காவற்றுறைப் பொலிஸாரினாரால் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தினால் தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts