Ad Widget

நீதிபதியின் இடத்தில் குற்றவாளி – சம்பந்தன்

“இலங்கையில் உள்ள பாரம்பரியத்தின் அடிப்படையில் குற்றவாளியாகவும் நீதிவானாகவும் ஒருவரே காணப்படுகின்றார். அதனால் தமிழ் மக்களே பாதிப்படைந்தவர்களாக இருக்கின்றார்கள். இதனால் வேறு பலர் நீதிபதிகளாக மாறவேண்டிய நிலைமையை அவர்களே உருவாக்கியிருக்கின்றமையால் தற்போது சர்வதேச சமூகம் ஒரு நீதிபதியாக மாறியிருக்கின்றது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

sambanthan 1_CI

“மாவை சேனாதிராஜா தலைமையில் அடுத்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வை பெற முயற்சிக்க வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவுசெய்யப்பட்டமையைப் பாராட்டும் முகமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் பாராட்டு விழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கொழும்புக் கிளையின் தலைவர் சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் அவரின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிளையின் துணைத்தலைவர் சட்டத்தரணி ராஜகுலேந்திரா வரவேற்புரையை வழங்கினார்.

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பேராசிரியர் சிற்றம்பலம், தமிழரசுக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர் திருமதி வளர்மதி சுதாகரன் வாழ்த்துரையையும் கொழும்புக் கிளையின் செயலாளர் சி.இரத்தினவடிவேல் நன்றி உரையையும் வழங்கினர். சிரேஷட தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் புதிய தலைவர் மாவை.சேனாதிராஜா ஆகியோருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்நிகழ்வில் கொழும்புக் கிளையின் முக்கியஸ்தர்கள், இளைஞர் அணி உறுப்பினர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இங்கு உரையாற்றுகையிலேயே இரா.சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

எமது பலம் எமது மக்கள். எமது உரிமைப்போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் எமது மக்கள் தமது உறுதியான நிலைப்பாட்டை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபித்திருக்கின்றார்கள். எமது மக்கள் பலவிதமான துன்பங்களையும் துயரங்களையும் எதிர்நோக்கியிருக்கின்றார்கள். எமது மக்கள் அடிபணியவில்லை. எமது மக்கள் தனித்துவமான மக்கள். பெரும் பாரம்பரியத்தை கொண்டவர்கள். சொந்த மொழி, கலாசாரம் என்பவற்றை தனியாகக் கொண்டவர்கள். இந்த நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்.

சரித்திரத்தினுடைய பெறுமதியையும் பெருமையையும் அம்மக்கள் உணர்ந்துள்ளார்கள். இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்கள் ஒரு தனித்துவமான மக்களாக இருக்கின்றார்கள். ஒரு காலத்தில் அவர்கள் சொந்த ஆட்சியை தனியாக வைத்திருந்தார்கள். கண்டிய சிங்கள மக்கள், கீழ்நாட்டு சிங்களமக்கள் சொந்த ஆட்சியை வைத்திருத்ததைப் போன்று தமிழ் மக்களும் தமது சொந்த ஆட்சியை வைத்திருந்தார்கள். பிரிவினையைக் கோரவில்லை தந்தை செல்வா எமது போராட்டத்தை ஆரம்பித்த போது பிரிவினையைக் கோரவில்லை. இறைமையைப் பகிர்ந்து பிரயோகிக்கும் அடிப்படையில் எமது கருமங்களை நாமே கையாளக்கூடிய வகையில் போதியளவிலான அதிகாரப் பகிர்வையே கோரினார்.

1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பதாக 1970ஆண்டு தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரிவினையை ஆதரிக்கக் கூடாது என்பதை தெளிவாக கூறியிருந்தோம். பிரிவினையின் அடிப்படையில் யாராவது தேர்தலில் போட்டியிட்டால் அவர்களை தோற்கடிக்க வேண்டும் எனக் கோரியிருந்தோம். பேராசிரியர் சுந்தரலிங்கம், பெரியார் நவரட்ணம் ஆகியோர் பிரிவினையைக் கோரி போட்டியிட்ட போது அவர்கள் கட்டுப்பணத்தை இழந்து தோல்வியடைந்தார்கள். ஆகவே, நாம் பிரிவினையைக் கோரவில்லை.

நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரும் அடைந்த பின்னரும் கூட நாம் பிரிவினையைக் கோரவில்லை. சமஷ்டியைக் கோரவில்லை. அதுதான் நாம் இழைத்த தவறாகும். 1947ஆம் ஆண்டு அரசியல் சாசனத்தில் உள்ள அடிப்படைப் பாதுகாப்புக்கள் நீக்கப்பட்டு, தமிழ், சிங்களத்திற்கு வழங்கப்பட்ட சமவுரிமை மாற்றப்பட்டு, உத்தியோகபூர்வமாக சிங்களம் அறிவிக்கப்பட்டு, பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, ஒற்றையாட்சி முறைமையின் கீழ் எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் என அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, 1972ஆம் ஆண்டு அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டபோதுதான் நாம் இழந்த இறைமையை மீண்டும் கோர உரிமை இருக்கின்றது என்ற அடிப்படையில் பிரிவினையைக் கோரினோம்.

நீண்ட காலம் அரசியல் ரீதியாக, அஹிம்சை ரீதியாக, ஆயுத ரீதியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆயுதப்போராட்டம் நிறைவுக்கு வந்து ஐந்து வருடங்களாகின்ற நிலையில் தற்போது மீண்டும் பகிர்ந்தளிக்கப்படுகின்ற இறைமையின் அடிப்படையில் போதியளவு அதிகாரப்பகிர்வுடன் எமது அரசியல் , பொருளாதார, சமூக, கலாசார ரீதியான தேவைகளை நாமே முடிவெடுத்து நாமே நிறைவேற்றக்கூடிய வகையில் எமக்கு ஓர் அரசியல் தீர்வு தேவை. இக்கோரிக்கையில் எவ்வாறான தவறுமில்லை. இது நியாயமான கோரிக்கை. தமிழ் மக்கள் தனித்துவமானவர்கள்.

பல்வேறு பாரம்பரியங்ளை, மொழிகளைப் பேசுகின்ற மக்கள் வாழும் பிரதேசங்களில் அரசியல் சானத்தின் அடிப்படையில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் ஸ்கொட்லாந்தில் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடைபெற்றது. 45வீதமான மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். 55வீதமான மக்கள் பிரிவினையை எதிர்த்தார்கள். ஸ்கொட்லாந்து தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியத்துடன் இருக்கின்றது. ஸ்கொட்லாந்திலுள்ள மக்கள் பாதுகாப்பாக – கௌரவமாக – தமது அபிலாஷைகளை தாமே நிறைவேற்றிக்கொள்கின்றார்கள். அதிகாரப்பகிர்வு முறை அங்கு இருக்கின்றது.

ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சியில் உள்ள கொன்சவேட்டிவ் கட்சி, லிபரல் கட்சி, தொழிற்கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் ஸ்கொட்லாந்துக்கு மேலும் அதிகாரப்பகிர்வை வழங்குவோம் என்ற வாக்குறுதியை பகிரங்கமாக அளித்துள்ளார்கள். அதன் காரணமாக கூடுதலாக மக்கள் பிரிவினைக்கு எதிராக வாக்களித்தார்கள். ஸ்கொட்லாந்து ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து 300வருடங்களுக்கு மேலாகிவிட்டது. 1833ஆம் ஆண்டு கோல்புறுக் சீர்திருத்தத்தின் அடிப்படையில் ஆங்கிலேயரால் கண்டி, கீழ்நாட்டுச் சிங்கள. தமிழ் இராச்சியங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டன.

எம்மைப் பொறுத்தவரையில் நாம் ஒன்றாக இணைக்கப்பட்டு இன்னமும் 200 ஆண்டுகள் கூட எட்டவில்லை. ஸ்கொட்லாந்து மக்கள் எவ்வாறு தனித்துவ மக்களாக இருக்கின்றார்களோ அதேபோன்று இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களும் வேறுபட்டவர்களாக இருக்கின்றார்கள். கனடாவின் கியூபெக்கிலும் சர்வஜன வாக்கெடுப்பொன்று 15வருடங்களுக்கு முன்பதாக நடைபெற்றது. 49.5சதவீதமானவர்கள் பிரிவினைக்கும் 50.5வீதமானவர்கள் பிரிவினைக்கு எதிராகவும் வாக்களித்தனர்.

கியூபெக் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் அந்த நாட்டில் உள்ள அரசியல் சாசனத்தின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணயம் இருக்கின்ற காரணத்தால் அவர்கள் பிரிவினையை கோரமுடியாது எனத் தீர்ப்பளித்து. இருந்தபோதும் சமச்சீரற்ற அதிகரப்பகிர்வின் முறையில் கியூபெக்கிற்கு கனேடிய அரசு கூடிய அதிகாரங்களை பகிர்ந்தளித்துள்ளது. இந்தியாவை எடுத்துப் பார்த்தாலும் தமிழ் நாட்டில் தமிழர்களும் ஏனைய பிராந்தியங்களில் அந்தந்தப் பிராந்தியத்தவர்களுமே ஆட்சி புரிகின்றார்கள்.

இவையே நாகரீகமான ஆட்சிமுறைகளாகும். பொலிஸ் அதிகாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எமக்கு பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாது எனக் கூறுகின்றார்கள். எமக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் நாம் அதனை பக்குவமாக பயன்படுத்துவோம். அவர்களை விடவும் சிறப்பாக பயன்படுத்துவோம். சுவிட்ஸர்லாந்தில் பொலிஸ் அதிகாரம் முற்றுமுழுதாக மத்திய அரசிடம் இல்லை. காணி அதிகாரத்தை வழங்க முடியாது எனக் கூறுகின்றார்கள்.

ஒரு படித்த அனுபவம் வாய்ந்த தலைவர் 1957ஆம் ஆண்டு எமக்கு வழங்கிய காணி அதிகாரத்தை விடவும் குறைவான அதிகாரத்தை நாம் பெறலாமா? இதுதான் தற்போதுள்ள கேள்விகள். நீதிபதியாக சர்வதேசம் நீண்டகாலமாக இந்த நாட்டில் குற்றவாளியே நீதிவானாக இருக்கின்றார். இந்த நாட்டில் உள்ள பாரம்பரியத்தின் அடிப்படையில் குற்றவாளியும் நீதிவானாகவும் ஒருவரே காணப்படுகின்றார்.

அதனால் தமிழ் மக்களே பாதிப்படைந்தவர்களாக இருக்கின்றார்கள். இதனால் வேறு பலர் நீதிபதிகளாக மாறவேண்டிய நிலைமையை அவர்களே உருவாக்கியிருக்கின்றார்கள். தற்போது சர்வதேச சமூகம் ஒரு நீதிபதியாக மாறியிருக்கின்றது. தொடர்ந்தும் மக்களுக்கு அநீதி இழைக்கப்படமுடியாது. பாதுகாப்பாக, கௌரவமாக ஒரு சமூகம் வாழுவதற்குரிய அதிகாரங்கள் பகிரப்படவேண்டுமென சர்வதேச சமூகம் வலியுறுத்துகின்றது.

சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டிருந்தால் அவை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடைபெறவேண்டும். ஏறக்குறைய நான்கு வருடங்களாக உள்நாட்டு விசாரணைகள் நடைபெறாததன் நிமித்தம் சர்வதேச விசரணை நடைபெறுகின்றது. சாத்வீக போராட்டத்திற்கு சர்வதேசத்தின் ஆதரவு எமது மக்களின் உறுதித்தன்மையும் தமது நிலைப்பாட்டில் திடமாக இருந்தமையும் அவர்களுக்கான பலத்தை அளித்துள்ளது.

ஒரு சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு நாம் முடிவெடுத்தால் எவ்வித வன்முறைகளும் இன்றி அதனைப் பக்குவமாக முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு முன்னெடுப்போமாக இருந்தால் சர்வதேச சமூகம் எமக்கு பின்னால் நூற்றுக்கு நூறு வீதம் நிற்கும் என்பது நிச்சயம். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நூற்றுக்கு நூறு வீதம் எங்களுடன் தான் நிற்பார் என எமது சந்திப்பின் போது எமக்குக் கூறியிருந்தார்.

தேரருடான சந்திப்பு மத்தேகமவில் இருக்கும் மித்தபான தேரரை அண்மையில் சந்தித்த போது பண்டா – செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறிவதற்காகச் சத்தியாகிரகத்தில் தாம் இருந்தார் என்றும், அது எவ்வளவு பாரிய தவறு என்பதைத் தாம் தற்போது உணர்கிறார் என்றும் கூறினார். தன்னுடைய கருத்தின்படி சிங்களத் தலைவர்கள் முன்வந்து உண்மையைச் சொல்வார்களாக இருந்தால் 85 வீதமான மக்கள் அதிகாரப்பகிர்வை ஆதரப்பார்கள் என்றும் அவர் சொன்னார்.

இதுதான் நிலைமையாகும். நம்பிக்கை ஆகவே, பெரும்பான்மை முற்போக்கு சக்திகளின் ஆதரவைப் பெறவேண்டும். அதேபோன்று இஸ்லாமிய சகோதரர்களின் ஆதரவையும் பெறவேண்டும். சர்வதேசத்தின் ஆதரவை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். தற்போது அரசு வடக்கு, கிழக்கு இனப்பரம்பலை மாற்றியமைத்து அங்குள்ள மொழி, கலாசார ரீதியான தனித்துவமான விடயங்களை அகற்றினால் குறைந்தது பத்து வருடங்களினுள் இனப்பிரச்சினையே இல்லை எனக் கூறமுடியும் எனக் கருதுகின்றது.

எனவே, தம்பி மாவை சேனாதிராஜாவின் தலைமையில் அடுத்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கான ஒரு முடிவை நாம் காண முயற்சிக்கவேண்டும்” – என்றார்.

Related Posts