Ad Widget

நிவாரணங்களை மீள வழங்குமாறு கோரி தம்பிராசா உண்ணாவிரதத்திற்கு முஸ்தீபு

thambirasaவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள நிவாரணங்களை மீளவும் வழங்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 16ஆம் திகதி வியாழக்கிழமை முதல் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக முத்தையா பிள்ளை தம்பிராசா இன்று தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“யுத்த காலத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த நிவாரணங்கள் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் எவரும் இல்லையென்று ஜக்கிய நாடுகளுக்கு காட்டுவதற்காக இடம்பெயர்ந்த மக்களிற்கான நிவாரணங்களை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.

இந்த செயற்பாடு அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதனால் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக சம்பூர் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த 869 குடும்பங்களும் யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்துள்ள 6500 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பொதுமக்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியேற முடியாமல் அவர்களின் சொந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுவதற்கு எமது தமிழ்த் தலைமைகள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென்பது கவலைக்கிடமானது. இந்த நிலையில், நான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளேன். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறையுள்ள அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ள முடியும்” என்றார்.

அரசாங்கத்தினால் இடம்பெயர்ந்த மக்களிற்கான நிவாரணப் பொருட்களில் 5உம் அதற்கு மேற்பட்டோரை கொண்ட குடும்பங்களுக்கு 1,260 ரூபா பெறுமதியான பொருட்களும் 4 பேரை கொண்ட குடும்பங்களுக்கு 1,050 ரூபா பெறுமதியான பொருட்களும் 3 பேரை கொண்ட குடும்பங்களுக்கு 720 ரூபா பெறுமதியான பொருட்களும் 2 பேரை கொண்ட குடும்பங்களுக்கு 315 பெறுமதியான பொருட்களும், ஒரு நபருக்கு 168 ரூபா பெறுமதியான பொருட்களும் வழங்கப்பட்டு வந்தன.

இருந்தும், இடம்பெயர்ந்த மக்களிற்கு 6 மாதங்களுக்கு மட்டும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக நிவாரணங்கள் 2010 இலிருந்து 2011 காலப்பகுதியில் படிப்படியாக நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுத்தத்திற்கு எதிராகவே தம்பிராசா உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபடவுள்ளார். தம்பிராசா ஏற்கனவே, அங்கஜனின் தந்தை இராமநானை கைது செய்யக்கோரி யாழ். பொலிஸ் நிலையம் முன்னாலும் தொடர்ந்து யாழ்.மாவட்டச் செயலகம் முன்னாலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அத்துடன் காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி யாழ். முனியப்பர் கோவிலின் முன்னாலும் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்திகள்

தம்பிராசா உண்ணாவிரதத்தில் குதிப்பு

தம்பிராசா மீண்டும் உண்ணாவிரதம்

பொலிஸார் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டனர்: தம்பிராசா

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வேட்பாளர் உண்ணாவிரத போராட்டம்

Related Posts