Ad Widget

நிவாரணங்களை ஏற்க இந்தியத் தூதரகம் மறுப்பு!

தமிழகத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வட மாகாணசபை மற்றும் ஏனைய சில அமைப்புக்களினால் திரட்டப்பட்ட பணம் மற்றும் பொருள் உதவிகளை ஏற்றுக்கொள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.

தமிழக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்வதில்லை என இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிராலய காரியாலயம், வட மாகாணசபைக்கு அறிவித்துள்ளது.

வட மாகாண சபையும் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் பல இடங்களில் சேகரிப்பு நிலையங்களை உருவாக்கி பொருட்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து அதற்கு பபணம் திரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்துடன் நட்புறவை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு உதவிகள் வழங்கப்பட முயற்சித்தாலும், மத்திய அரசாங்கத்தின் உத்தரவினை மீறி மாநில அரசாங்கத்தினால் தீர்மானங்களை எடுக்க முடியாத நிலைமை காணப்படுவதனால் இந்த உதவிகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் இலங்கை டெஸ்ட் வீரர்கள் முத்தையா முரளீதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி உதவிகளை அறிவித்திருந்தனர். வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்வதில்லை என்ற இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு அமைய, இந்த உதவிகளும் நிராகரிக்கப்படலாம் என கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts