Ad Widget

நில அபகரிப்புக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை 18ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஏற்பாடு

நில அபகரிப்புக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை 18ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்துள்ளது. அந்த போராட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியும் பங்குகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,யாழ்ப்பாணம், பேரூந்து நிலையத்திற்கு முன்பாக எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள, இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி எமது கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.தமிழ்ப் பாரம்பரிய பிரதேச காணி நில அபகரிப்பு உட்பட அரசாங்கத்தின் அனைத்து மேலாதிக்க செயற்திட்டங்களுக்கும் எதிராக, மக்களை அணி திரட்டி ஜனநாயக ரீதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுதியான நீண்டகால நிலைப்பாடாகும்.

இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அக்கறையுடன் செயல்படும் சர்வதேச சமூகம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் தேசிய சக்திகளின் செயற்பாடுகளுக்கு சமாந்திரமாக இத்தகைய உள்நாட்டு போராட்டங்கள் அமையவேண்டும். ஜனநாயகரீதியான இத்தகைய சாத்வீக போராட்டங்களின் அவசியம் பற்றியும், இந்த போராட்டங்களில் தென்னிலங்கை முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளையும் இணைத்து கொள்ளவேண்டும் என்பது பற்றியும், நமது தலைவர் மனோ கணேசன் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

இந்த பின்னணியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள எமது கட்சியின் தலைமைக்குழு முடிவு செய்துள்ளது.அனைத்து தமிழின உணர்வாளர்களும், ஜனநாயக சிந்தனையாளர்களும், கட்சி பேதங்களை புறந்தள்ளிவிட்டு அநீதிக்கு எதிரான இந்த சாத்வீக போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் அணிதிரண்டு கலந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி பகிரங்க அழைப்பு விடுக்கின்றது. என்றுள்ளது.

Related Posts