Ad Widget

நிலையான ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வே வேண்டும்! முன்னாள் பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தினார் சம்பந்தன்!!

நிலையான, ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய, நியாயமான, செயற்படுத்தப்படக்கூடிய ஓர் அரசியல் தீர்வை எட்டுவதன் அவசியத்தை முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரொனி பிளயருடனான சந்திப்பின் போது வலியுறுத்தினார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன்.

இலங்கை வந்துள்ள முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரொனி பிளயர் நேற்று திங்கட்கிழமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள தீர்வு காணப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமருக்கு சம்பந்தன் தெளிவுபடுத்தினார்.

இதில் வடக்கில் காணப்படும் அதிகளவிலான இராணுவப் பிரசன்னம், இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிப் பிரச்சினை, காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் எடுத்துரைத்ததுடன் இந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் காணப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் காத்திரமான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், மக்களின் வாழ்வாதாரங்கள் வலுப்படுத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஐ.நா. தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், பொறுப்புக் கூறுதலானது உண்மை, நீதி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு செயற்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

அது மாத்திரமன்றி நிலையான, ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய, நியாயமான, செயற்படுத்தப்படக்கூடிய ஓர் அரசியல் தீர்வை எட்டுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

Related Posts