Ad Widget

நிலமீட்பு போராட்டத்தில் யாரையும் நம்பப்போவதில்லை: கேப்பாப்பிலவு மக்கள்!

தமது சொந்த நிலத்தினை மீட்பதற்கு இனிமேல் யாரையும் நம்பப்போவதில்லை என கேப்பாப்பிலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

கேப்பாப்பிலவு மக்களின் நிலமீட்புப் போராட்டம் 533 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,”எமது போராட்டம் 500 ஆவது நாளை அடைந்தபோது நாம் எமது காணிகள் குறித்து தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கும் மேலும் எமது போராட்ட வடிவங்களை மாற்றுவதற்கும் நினைத்திருந்தோம்.

ஆனால் எமது போராட்டத்திற்கு தமிழ் அரசியல் தலைமைகளோ அல்லது அரசாங்கமோ இதுவரை எந்த ஆக்கபூர்வமான தீர்வுகளையும் தரவில்லை.

நாம் எமது சொந்த நிலங்களையே திருப்பித்தருமாறு கேட்கின்றோம். நாம் எமது விடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் மற்றும் சர்வதேசத்தைப் பெரிதும் நம்பியிருந்தோம்.

ஆனால் 533 நாட்களைக் கடந்தும் இதுவரையிலும் எந்த முன்னேற்றமும் எமது விடயத்தில் இடம்பெறவில்லை. சர்வதேசம் கூட எம்மைத் திரும்பிப் பார்க்கவில்லை.

இனிமேலும் யாரையும் நம்பாமல் நாம் எமது நிலங்களை மீட்பதற்குரிய நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். அது எவ்வாறான நடவடிக்கைகள் என்பது இன்னும் முழுமையாகத் தீர்மானிக்கப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts