Ad Widget

நிலஅளவைக்கு எதிர்ப்பு: புல்மோட்டையில் முறுகல் ஒருவர் காயம்

புல்மோட்டை, அரிசிமலை பகுதியில் பூஜாபூமி திட்டத்தின் கீழ் நில அளவை திணைக்களத்தினால் இன்று செவ்வாய்கிழமை (26) மேற்கொள்ளப்படவிருந்த 500 ஏக்கர் காணிக்கான நில அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இதனைத் தொடர்ந்து நில அளவீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

trinco

அங்கு வந்த பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நில அளவை நடவடிக்கைக்கு எதிராக அரிசிமலை பகுதியில் கடை அடைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது.

சம்பவிடத்துக்கு திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபிக், கிழக்கு மாகாணசபை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். அன்வர், குச்சவெளி பிரதேச சபை தலைவர் எ.பீ.முபாறக், உபதலைவர் எ.ஹதம் பாபா தௌபிக், திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபர் எஸ். அருள்ராசா, கிண்ணியா நகரசபை தலைவர் டாக்டர்.ஆர்.எம்.கில்மி, குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் எம். ஹாசிக், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.புஸ்பகாந்தன், குச்சவெளி பிரதேச சபை செயலாளர் கிருஷ்நேந்திரன் ஆகியோர் வருகை தந்தனர்.

இதேவேளை, குறித்த்டத்துக்கு வருகை தந்த திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.யே.மார்க் அரசியல்வாதிகளுடனும் பொதுமக்களுடனும் கலந்துரையாடினார்.

இன்று மேற்கொள்ளப்படவிருந்த நில அளவை நடவடிக்கையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுமெனவும் எனினும், மற்றுமொரு தினத்தில் குறித்த நில அளவை நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அதன்போது அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

குறித்த இடத்தில் 1000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர் . ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு புல்மோட்டை பொலிஸார் மாத்திரமின்றி குச்சவெளி, நிலாவெளி, திருகோணமலை, ஸ்ரீபுரம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்தும் பொலிஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

Related Posts