Ad Widget

நிறை குறைத்து உருளைக்கிழங்கு விநியோகம்

வரட்சி நிவாரணத்திற்கு வழங்கப்பட்ட உருளைக்கிழங்கு, நிறை குறைந்த அளவுகளில் புலோலி, உடுப்பிட்டி ஆகிய பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 கிலோகிராம் உருளைக்கிழங்குகள் வழங்கும் நடவடிக்கை யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தந்த பிரதேசங்களிலுள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டு உருளைக்கிழங்குகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், மேற்படி இரு சங்கங்களிலும் வழங்கப்பட்ட உருளைக்கிழங்குகள் 3 ½ கிலோவிலிருந்து 4 கிலோ வரையிலே காணப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொதுமக்கள் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் முகாமையாளர்களிடம் நியாயம் கேட்டவேளை, வாங்கி செல்லும் போது நீங்கள் அதனை கவனித்திருக்க வேண்டும் என கூறப்பட்டது.

இது தொடர்பில் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தை தொடர்புகொண்டு கேட்டபொழுது,

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கு உருளைக்கிழங்குகள் வழங்கவேண்டும் என்பதற்காக ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் உருளைக்கிழங்கின் அளவை குறைத்து வழங்குவது தொடர்பில் ஆலோசனை செய்து வருகின்றோம்.

ஆனால், இது நடைமுறைப்படுத்தப்படவில்லையெனவும், அவ்வாறு நிறை குறைந்த உருளைக்கிழங்குகள் விற்பனை செய்த சங்கங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் கூறினார்.

Related Posts