Ad Widget

நிரந்தர நியமனம் வழங்கக் கோரி கூரை மீதேறி பெண் போராட்டம்!

வவுனியா நகரசபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி சேவைக்காலம் றிறைவடைந்த பெண்ணொருவர் நகரசபை கட்டிட கூரை மீது ஏறி இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதேவேளை இவருக்கு ஆதரவாக மேலுமொரு பெண் நகரசபை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

vavuniya

மேற்படி இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது

கடந்த காலங்களில் டெங்கு நோய் வவுனியாவில் பரவாமலிருப்பதற்காக நகரசபையினால் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து 07 தொழிலாளர்களுக்கு ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டதாக நகரசபை செயலாளரினால்
அண்மையில் கடிதமொன்று வழங்கப்பட்டு சேவை முடிவுறுத்தப்பட்டிருந்தது.

இந் நிலையில் கடந்த 9 ஆம் திகதி அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஆதரவுடன் ஒப்பந்தம்
முடிவடைந்த 5 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் தொழிற்சங்கம் மேற்கொண்ட பல்வேறு
நடவடிக்கைகளின் பின்னர் போராட்டம் முடிவுறுத்தப்பட்டு அதிகாரிகளின் முடிவுகளுக்காக காத்திருப்பதாக அச்
சங்கத்தின் வவுனியா இணைப்பாளர் எஸ். சித்திரன் தெரிவித்தhர்.

இன்று காலை தொழிற்சங்கம் மற்றும் நகரசபையினருக்கு எவ்வித அறிவித்தலும் வழங்காத நிலையில் இரு பெண்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் எஸ். சித்திரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது

எமது தொழிற்சங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந் நிலையில் இவ் இரு பெண்களும் எமக்கு எவ்வித அறிவித்தலும் இல்லாது இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் எமது சங்கம் இப் போராட்டத்தpற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

மேலும் இதேவேளை வவுனியா நகரசபையின் செயலாளரிடம் தொடர்பு கொள்ள முயன்றபோது பொலிஸாருடனான சந்திப்பு இருப்பதன் காரணமாக கருத்து கூற முடியாது என நிர்வாக உத்தியோகத்தரை தொடர்பு கொள்ளுமாறு கோரியிருந்தார்.

இதனையடுத்து நிர்வாக உத்தியோகத்தர் என்.எஸ். கிருஸ்ணனிடம் தொடர்பு கொண்டபோது

இவ் இரு பெண்களும் எமக்கு எவ்வித அறிவித்தலும் வழங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இத் தொழிலாளர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக நாம் பல முயற்சிகளை எடுத்திருந்தோம். அத்துடன் அவர்களது தொழிற்சங்கமும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. எனினும் இது வரை எவ்விதமான முடிவும் கிடைக்கவில்லை. இது எமது சக்திக்கு அப்பாற்பட்ட விடயம் என தெரிவித்தார்.

இப் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரு பெண்களுடனும் கலந்துரையாடிய போதிலும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமையினால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாதுகாப்பு கடமைகளுக்காக நியமித்துவிட்டு ஏனைய பொலிஸார் அவ்விடத்தில் இருந்து நகர்ந்து விட்ட நிலையில் அவர்களது போராட்டம் தெடர்ந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts