Ad Widget

நிரந்தர நியமனம் வழங்கக்கோரி தற்காலிக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். போதனா வைத்தியசாலையின் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்க தற்காலிக ஊழியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

DSCF8453 (1)

யாழ். போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடத்திற்கு முன்பாககாலை 9.00 மணிமுதல் சுமார் ஒரு மணித்தியாலயங்கள் இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் போது, ‘தொண்டர்களாக 3 வருடங்கள் வேலை செய்தோரை உள்வாங்குவதா? அல்லது புதியவர்களை நியமிப்பதா?’, ‘வேலை வாங்கியவர்களே உங்கள் பதில்தான் என்ன’, ‘வேலைக்கு நாங்கள் வேண்டும். ஆனால் நியமனத்திற்கு மட்டும் வெளியார் வேண்டும்’ போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை கைகளில் தாங்கியவாறு தமது போராட்டத்தினை மேற்கொண்டனர்.

போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா தொண்டர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

தொண்டர்களின் கோரிக்கைகள் சுகாதார அமைச்சுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

தொண்டர்களுக்கு கல்விப் பொதுதராதர சாதாரண தர கல்வி தகைமை இருக்க வேண்டும். கல்வி தகைமையின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கும் போது, கல்வித் தகைமை இருப்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. கல்வித் தகைமை இல்லாதவர்களுக்கு பிரச்சினை ஏற்படும்.

அத்துடன், அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற பின் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும். அவ்வாறு அமைச்சரவையின் அங்கீகாரம் இன்றி நியமனம் வழங்கப்பட்டால், ஒருவருடத்தின் பின்பு வீட்டிற்கு செல்ல நேரிடும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் நிரந்தர நியமனம் வழங்குவதில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்று தெரியாது. ஆனால் நடவடிக்கை எடுப்பார்கள். அதுவரையில் வைத்தியசாலையினை பாதிக்க விட முடியாது. எனவே மீண்டும் வேலை செய்யுமாறு அவர் வலியுறுத்தினார்.

ஆனால், தொண்டர்கள் பிரதிப்பணிப்பாளரின் வாக்குறுதியினை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன், கொட்டும் மழையிலும் தமது போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தில் நிரந்தர நியமனம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்ததுடன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினையும் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கு தெரியப்படுதுவதாக அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளார்.

தமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படாவிட்டால் தொடர்ச்சியாக போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்க தற்காலிக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்

Related Posts