Ad Widget

நிரந்தர நியமனத்தை உடன் வழங்குங்கள் : சமூக சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்.சமூக சுகாதார பணியாளர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முதல் பண்ணை சுகாதார கிராமத்திற்கு முன்னால் முன்னெடுத்தனர்.

1998 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை சுகாதார தொண்டர்களாக பணியாற்றிய பின்னர் 2012 ஆம் ஆண்டிற்கு பின்னர் சமூக சுகாதார பணியாளர்களாக 232 பேர் 6000 ரூபா சம்பளத்துடன் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் இவர்களுக்கான நிரந்தர நியமனம் இன்னமும் வழங்கப்படவில்லை.

குறித்த சுகாதார பணியாளர்கள் அமைச்சர் சத்தியலிங்கத்தை சந்திக்க பண்ணையில் அமைந்துள்ள சுகாதார கிராமத்திற்கு இன்று சென்றனர்.ஆனால் அவர் அங்கு இல்லை.இதனால் செயலாளர் ரவீந்திரனை சந்தித்து இந்தப் பிரச்சனைகள் தொடர்பில் முன்வைத்தனர்.

அதாவது , யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் 127 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டபோதும் 10 வருடங்களுக்கு மேல் பணியாற்றும் எங்களுக்கு ஏன் இன்னமும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என்று சுகாதார பணியாளர்கள் அமைச்சின் செயலாளர் ரவீந்திரனிடம் வினவிய போது அதற்கு பதிலளித்த அமைச்சின் செயலாளர் யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் மத்திய அரசின் கீழ் உள்ளதால் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

மேலும் அதற்கு சுகாதார பணியாளர்கள் மத்திய அரசின் கீழ் உள்ள யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுகின்றது என்றால் வடமாகாண சுகாதார அமைச்சின் கீழிருக்கும் சுகாதார தொண்டர்களாகிய எமக்கு ஏன் இன்னமும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.எனவும் அவர்கள் வினவினர். அதுமட்டுமல்லாது எங்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். நாங்கள் மக்களுடன் இணைந்தும் சேவையாற்றுகின்றோம். எனவே தமக்கு உடனடியாக நிரந்தர நியமனத்தை பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதுடன் எமக்குரிய தீர்வு எட்டப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Posts