Ad Widget

நிரந்தர இராணுவ முகாமை கூழாவடியில் நிறுவ முயற்சி!

ஆனைக்கோட்டை கூழாவடியில் தனியாருக்குச் சொந்தமான 16 பரப்புக் காணியை இராணுவ முகாம் அமைப்பதற்காகச் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக அந்தக் காணியை அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை வருகை தரவுள்ளதாகக் காணி உரிமையாளருக்கு அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு இந்தக் காணியை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தும், இதுவரை காணி மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1995 ஆம் ஆண்டு வலிகாமம் இடப்பெயர்வின் பின்னர், மேற்படி காணியில் இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர். 5 குடும்பங்களுக்குச் சொந்தமான 16 பரப்பில் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு இந்தக் காணியை இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட்டுக்குச் சுவீகரிப்பதற்காக நில அளவை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டது. எனினும், காணி உரிமையாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம், தமது காணியை இராணுவத்தினரின் பிடியிலிருந்து விடுவிக்குமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், சிறுவர் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா, யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருக்கு கடிதம் மூலமாக காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்குப் பிரதமர் செயலகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை இது தொடர்பிலான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளன.

மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு, இந்த விடயம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இராணுவத் தலைமையகத்தைக் கோரியிருந்தது.இருப்பினும் இதுவரை காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அத்துடன், குறித்த காணியைச் சுவீகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts