Ad Widget

நியாயமானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வு வேண்டும்

நியாயமானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வு கிட்டப்படவேண்டும். அதன்மூலம் மக்கள் அந்த அங்கிகாரத்தை பயன்படுத்தும் நிலை இருக்கவேண்டும். இந்த பொறுப்பை அரசாங்கம் ஐ.நாவில் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதற்கும் தொழிலாளர்கள் இன்று கூறுகின்ற குறைபாடுகளுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. இவ்வாறானதொரு தீர்வு எட்டப்படும்போது பல குறைகள் தீர்க்கப்படும்’ என்று எதிர்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின எழுச்சிப்பேரணிக் கூட்டம், யாழ். மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘இங்கு முன்வைக்கப்பட்ட தீர்மானங்களில் தொழிற்சங்கங்களுக்குரிய பல தீர்மானங்கள் உள்ளடங்கியுள்ளன. இவை முழுமையாக நிறைவேற்றப்படுவதாக நான் கூறமாட்டேன். தொழிலாளர் உரிமைகள் மேலும் வலியுறுத்தப்படவேண்டும். அது உரிய இடங்களில் உள்ளடக்கப்படவேண்டும்.

இந்த நாட்டில் ஒரு அரசியல் சாசனம் உருவாக்க முயற்சிக்கப்படுகின்றது. அந்த அரசியல்சாசனம் உருவாக்கப்படும்போது, அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் சம்பந்தமாக தனிப்பட்ட கோவை அந்த அரசியல் சாசனத்தில் உள்வாங்கப்படும். தனிப்பட்ட கோவை ஊடாக மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் உள்ளடக்கப்படும். பொது தொழிலாளர் உரிமைகளும் உள்ளடக்கப்பட வேண்டும். சமூக, பொருளாதார அரசியல் உரிமைகளை உள்ளடக்கவேண்டும்.

மே தின நிகழ்ச்சி என்பது தொழிலாளர் மக்களை பொறுத்த வரையில் முக்கியமான புனிதமான நாள். தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் எந்த தொழிலை சார்ந்தவர்களாக இருந்தாலும் தங்களின் அந்தஸ்த்தை, உரிமைகளை பெறுவதற்கு சர்வதேச மட்டத்தில் பல போராட்டங்களை நடத்தியுள்ளார்கள்.

விசேடமாக தொழில் புரியும் நேரம் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் என்ற கோரிக்கை முன்வைக்கபட்டு மே 1ஆம் திகதி தொழிலாளர் தினமாக அங்கிகரிக்கப்பட்டு அனுஷ்டிக்கப்படுகின்றது.

இலங்கையில் முழுமையாக ஆங்கிலேயேர் காலத்திலும், சுதந்திரமடைந்த பின்னரும் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் எங்கள் சமூகத்தின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களின் சேவையில் சமூகத்தின் எதிர்காலம் தங்கியிருக்கின்றது.

தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அவர்களுடைய உரிமைகளுக்காக அவர்கள் எப்போதும் கோரிக்கைகளை முன்வைக்கவேண்டும். அவர்களுக்கு ஆதரவாக மக்கள் அவர்களுடைய நியாயமான கோரிக்கையை அடைவதற்கு நாமும் எப்போதும் ஒத்துழைப்போம். அது எங்கள் கடமை. அவர்களின் வாழ்க்கையை திருப்திகரமாக கொடுக்கவேண்டியது சமூகத்தின் தேவை. அதனை நாம் எப்போதும் உணர்ந்து செயற்படவேண்டும்.

விசேடமாக வடகிழக்கில் தமிழ் தொழிலாளர்கள் பல இன்னல்களை, நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். அழிவுகளை சந்தித்துள்ளார்கள். அவை ஈடு செய்யப்படவேண்டும்.

வட,கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு விசேட அபிவிருத்தி திட்டம், வடகிழக்கின் சில பகுதிகளில் கூடுதலான அபிவிருத்தியை செய்ய அரசாங்கம் சிந்திப்பதாகவும், அதற்கு உதவ சர்வதேசம் முன்வந்துள்ளதாகவும் நாம் அறிகிறோம்.

இந்த நாட்டில் இறைமையை பகிர்ந்தளிக்கும் அடிப்படையில், அதிகாரங்கள் பகிரப்பட்டு ஒரு ஆட்சி இருக்குமாக இருந்தால் இன்றைக்கு கூறிய பல குறைகளை நீங்கள் கூறியிருக்க மாட்டீர்கள்.

மக்களுடைய காணிகள் விடுவிக்கப்படவேண்டும். வலிகாமம் தொடர்பாக இங்கு பேசப்பட்டுள்ளது. உங்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ளுகிறோம். 2009ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை ஒன்றும் நடக்கவில்லை. ஆனால், இப்போது பல கருமங்கள் நடக்கின்றன. அது துரிதமாக நடக்க வேண்டும். துரிதமாக நடக்க எங்களால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் செய்கிறோம்.

அரசியல் தீர்வு எமக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் தேவையானது. இந்த நாடு முன்னேறுவதற்கு, இந்த நாடு கடன் சுமையில் இருந்து மீள, வெளிநாட்டவர் முதலீடு செய்வதானால் அபிவிருத்தி அடைவதாக இருந்தால், மக்கள் வாழ்க்கை மாற்றடைய அரசியல் தீர்வு இனங்கள் மத்தியில் எமக்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைவருக்கும் அத்தியாவசியமான தேவை.

நல்லிணக்க தீர்வை அடையாமல் எந்த அரசாங்கமும் தங்களுடைய இலக்கை அடைய முடியாது.

எமது மக்களின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில், இறைமை பகிரப்பட்டு இறைமை அடிப்படையில் அதிகாரத்தை பெற்று தீர்வை காண நாங்கள் தயார். சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில், அதுவே எமது நிலைப்பாடாகும்.

எல்லோரும் உணர்ந்து கொள்ளவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருமித்து செயலாற்றவேண்டும். தீர்வை காண்பதற்கு எமக்கு ஒர் சந்தர்ப்பம் வந்துள்ளது.. அதனை நாம் முழுமையாக பயன்படுத்தவேண்டும்.

நாம் இந்த சந்தர்ப்பத்தை அடைய பல விலைகளை கொடுத்துள்ளோம். எமது மக்கள் பல துன்பங்களை அழிவுகளை, உயிரிழப்புக்களை கொடுத்திருக்கின்றார்கள். இந்தச் சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்தவேண்டும். இந் நேரம் வேற்றுமைகளுக்கு இடமில்லை. அவ்விதமான செயலாற்றினால் சர்வதேசத்தின் மதிப்பை பெறுவோம்.

பல்வேறு மதங்கள், பிரிவுகளை சார்ந்த மக்கள் உலகத்தில் பல நாடுகளில் என்ன ஆட்சி முறை ஊடாக ஒற்றுமையாக வாழ்கிறார்களோ அவ்வாறான ஆட்சியை நாங்கள் கேட்கிறோம். நாட்டை பிரிக்க நாம் கேட்கவில்லை. அவ்வாறான தீர்வை கேட்பது எங்கள் பிறப்புரிமை’ என்றார்.

Related Posts