Ad Widget

நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை – முதலமைச்சர் சி.வி

யாழ்ப்பாணம், வலிகாமம் பகுதியிலுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பில் ஆராய்வதற்காக வடமாகாண சபையால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

wigneswaran__vick

தூய நீருக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது, வடமாகாண முதலமைச்சரிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டது. அந்த மகஜர் தொடர்பில், முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதில் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 85 சதவீதமான கிணறுகளில் எண்ணெய் மாசு இல்லையென்றும் மிகுதி 15 வீதமான கிணறுகளிலேயே இந்த எண்ணெய் மாசு காணப்படுகின்ற போதிலும் நியம அளவிலும் பார்க்க 200 மடங்கு குறைவாகவே அக்கிணறுகளிலும் இந்த மாசு காணப்படுவதாக நிபுணர் குழுவின் முதற்கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, ஆபத்தான பார உலோகங்கள் நீர் மாதிரிகளில் இல்லையென்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். முழுமையான ஆய்வு முடிவுகள் கிடைக்கும் வரையில் சந்தேகிக்கப்படும் பகுதிகளிலுள்ள கிணற்று நீரை குடிநீருக்குப் பயன்படுத்துவது தொடர்பாக பரிந்துரை செய்ய முடியாதுள்ளது.

அப்பகுதிகளிலுள்ள மக்களுக்காக விநியோகிக்கப்பட்ட நீர் விநியோகம், நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கும் வரையில் வழங்கப்படும். மேலதிக நடவடிக்கைகளும் நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

தூய நீருக்கான விசேட செயலணி முதலமைச்சரின் தலைமையில் மாகாண சுகாதார அமைச்சர், மாகாண விவசாய அமைச்சர், அரச அதிபர் ஆகியோரைத் துணைத் தலைவர்களாகக் கொண்டும் உரிய நிபுணத்துவ ஆலோசனைகளும் பெறப்பட்டு செயற்படும்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (12) முதலமைச்சர் செயலகத்தில் நடைபெறவுள்ள வடமாகாண சபையால் தூயநீருக்கான செயலணி, நிபுணர் குழுவின் குழுக்கூட்டத்தில் தூய நீருக்கான மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளை கலந்துகொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts