Ad Widget

நினைவேந்தல் நிகழ்வில் முதல்வருடன் இணைய பல்கலைக்கழக மாணவர்கள் மறுப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து முன்னெடுக்க வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கூட்டத்துக்கான பொது அழைப்பை ஏற்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வரும் மே 18ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் ஒழுங்கமைப்பில் நடத்தப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் அறிவித்தார்.

அத்துடன், அந்த ஒழுங்குகளை முன்னெடுக்க வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்தக் குழு இன்று (புதன்கிழமை) கூடி நினைவேந்தல் நிகழ்வின் ஒழுங்குகளை முன்னெடுக்கும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஓரணியில் முன்னெடுக்க முன்வரும் அனைத்துத் தரப்பினரையும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர் பொதுவான அழைப்பைவிடுத்திருந்தார்.

அத்துடன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குகள் தொடர்பில் கருத்துரைக்குமாறும் முதலமைச்சர் கேட்டிருந்தார்.

முதலமைச்சரின் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லை எனவும் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

‘தமிழினப் படுகொலையை சகல தரப்புகளும் ஒன்றிணைந்து பேரழுச்சியுடன் நினைவேந்துவது என்ற நோக்குடன் நாம் ஒழுங்குகளை முன்னெடுத்தோம். அதனை ஏற்க மறுத்து வடக்கு மாகாண சபை தாமே நினைவேந்தலை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தின் பேரழுச்சி நிகழ்வாக நடத்த நாம் திட்டமிட்டதை ஏற்காமல் வடக்கு மாகாண மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மாகாண சபை செயற்படுவதில் எமக்கு உடன்பாடில்லை’ என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Related Posts