Ad Widget

நிதி நிறுவனங்களை நம்பி ஏமாறாதீர்கள்

வடக்கு மாகாணம் பல வழிகளிலும் நலிவடைந்துள்ள நிலையில் நிதி நிறுவனங்களின் வருகையினால் பொருளாதார நிலையில் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது என யாழ். பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் துறை விரிவுரையாளர் இ. இரட்ணம் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் வாழ்நாள் கூட்டுறவாளருமான வீ.கே அருந்தவநாதனின் சேவைநலன்பாராட்டு விழாவும் புதிய ஆணையாளரை வரவேற்கின்ற நிகழ்வும் வடமாகாண பனை , தென்னை வள அபிவிருத்திக்கு கூட்டுறவு சங்கங்களின் சமாச கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

அதில் வாழ்த்துரை வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு சேவையில் சேர்ந்து கொள்வது முக்கியமல்ல ஆனால் எங்களால் என்ன செய்யப்பட்டது என்று சிந்திக்க வேண்டும்.

நாங்கள் கடமையாற்றும் நிறுவனத்திற்கு விசுவாசமாகவும் எமது திருப்திக்கும் இயன்றளவு சேவையினை வழங்க வேண்டும்.

தற்போது கூட்டுறவுத்துறை என்பது சர்வதேச ரீதியில் வளர்ந்து வருவதுடன் சமூக அபிவிருத்தியும் ஏற்பட்டு வருகின்றது.

கூட்டுறவுதுறையில் உள்ளவர்கள் ஒரு சில முயற்சிகளில் மட்டும் ஈடுபடாது அனைத்து துறைகளிலும் செயற்பட வேண்டும் இவ்வாறு செயற்பட்டால் மட்டுமே சிக்கனத்துடன் செயற்படுத்த முடியும்.

மேலும் வடக்கு மாகாணம் கடந்த கால அசாதாரண சூழல் காரணமாக மிகவும் நலிவடைந்து காணப்படுகின்றது. இவ்வாறு இருக்கும் நிலையில் நிதி நிறுவனங்கள் இங்குள்ள மக்களை ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளன. இதனால் பலர் நிர்க்கதிக்கும் ஆளாகியுள்ளனர்.

எனவே கூட்டுறவாளர்களுக்கு சிக்கனம் முக்கியமானது. இவ்வாறான நிதிநிறுவனங்களிடம் ஏமாரக்கூடாது. கூட்டுறவினால் சேரவேண்டிய திட்டங்களை செவ்வனே செய்ய வேண்டும் .

அத்துடன் கூட்டுறவு சமூகமயமாக்கப்பட்டு வரும் நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தில் கூட்டுறவு துறை தொடர்பிலான ஒரு வருட டிப்ளோமா கற்கை நெறியொன்றினையும் விரைவில் நடாத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று கல்வியின் முக்கியத்துவம் அதிகரித்துச் செல்கின்றது. எனவே பெற்றோர் பிள்ளைகளை இயன்றளவு கற்பிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 1981 ஆம் ஆண்டில் இருந்து கூட்டுறவுத்துறையில் பணியாற்றி யாழ். மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி பிரதி ஆணையாளராக கடமையாற்றிய வீ.கே அருந்தவநாதன் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி பிரதி ஆணையாளராக மாற்றலாகி செல்லவுள்ளார்.

அவரைக் கௌரவிக்கும் முகமாக வடமாகாண பனை , தென்னை வள அபிவிருத்திக்கு கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினரின் ஏற்பாட்டில் சேவைநலன்பாராட்டு விழா நடைபெற்றது.

இதன்போது வாழ்நாள் கூட்டுறவாளன் என்ற கௌரவம் வழங்கப்பட்டது. அத்துடன் புதிய பிரதி ஆணையாளர் வரவேற்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts