கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடமுருட்டி பகுதியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

பரந்தன் – பூநகரி பிரதான வீதியில் வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில், கிளிநொச்சி உருத்திரபுரம் – எள்ளுக்காட்டு பகுதியைச் சேர்ந்த நிரோசன் லக்ஷன் (வயது 10) எனும் சிறுவனே உயிரிழந்தவராவார்.
நாவற்பழ வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த அச்சிறுவன் வீதியைக் கடக்க முயன்ற போது, பூநகரியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.