Ad Widget

நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த இராணுவத் தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

யாழ்.நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமலாக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பான வழக்கில் நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ தளபதியாக கடமையாற்றிய துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் 24 இளைஞர்களை கைது செய்திருந்த நிலையில் அவர்கள் காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில், தமது உறவினர்களை மீட்டுத்தருமாறு குறித்த இளைஞர்களின் உறவினர்கள் யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் முதலாம் எதிரியாக இராணுவத் தளபதி துமிந்த கெப்பிட்டி வெலானவும் இரண்டாம் எதிரியாக இலங்கை இராணுவ தளபதியும் மற்றும் மூன்றாம் எதிரியாக எதிரியாக சட்டமா அதிபரும் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) யாழ் மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் வழக்காளிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய வழக்கறிஞர்கள், சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாவற்குழி தளபதியாக இருந்த துமிந்த கெப்பிட்டி வெலான தற்போதும் இராணுவ சேவையில் இருப்பதாக சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில், வழக்கின் முதலாம் எதிரியான இராணுவ தளபதி துமிந்த கெப்பிட்டி வெலானவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் எதிரிகள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இரண்டு வழக்கறிஞர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts