Ad Widget

நாவற்குழி குடியேற்றத்துக்கு மின் வழங்குமாறு அழுத்தம்

home_navatkuliநாவற்குழியில் அமைந்துள்ள சட்டவிரோத சிங்களக் குடியேற்றத்துக்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் மின்சார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணி நாவற்குழியில் உள்ளது. குறித்த காணியில் கடந்த 2010 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு வந்த சிங்கள குடும்பங்கள் அங்கு குடியேறியுள்ளன.

இதுவரை குறித்த காணிகள் பகிர்ந்தளிக்கப்படாத நிலையில் சாவகச்சேரி பிரதேச சபையின் அனுமதிபெறாமல் சட்டவிரோதமாக அங்கு சிங்கள மக்கள் வீடுகளை அமைத்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த பிரதேசத்துக்குக் கொழும்பிலிருந்து வருகை தந்த நிலஅளவைத் திணைக்களத்தினர் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் காணிகளைப் பங்கீடு செய்ய முயன்றனர்.

அந்தப் பகுதியில் உள்ள தமிழ் மக்களுக்கும் காணிகள் வழங்கப்பட வேண்டும் என்பதால் குறித்த பணிகளை இடை நிறுத்திவிட்டு அவர்கள் கொழும்பு திரும்பியிருந்தனர்.

இவ்வாறு சட்டவிரோத குடியிருப்பாகவுள்ள நாவற்குழி சிங்கள குடியேற்றத்துக்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின்சார வசதிகளை வழங்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பணித்துள்ளது.

குறித்த சட்ட விரோத குடியேற்றத்துக்குச் செல்வதற்கான பாதை இல்லாமையினால் அதை அமைத்துத் தருமாறு பிரதேச சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மின்சார இணைப்புக்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts