Ad Widget

நாவற்குழியில் பறவைகள் சரணாலயம்

நாவற்குழி பகுதியில் பறவைகள் சரணாலயம் ஒன்றை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் வடமாகாண விவசாய மற்றும் சூழலியல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், செவ்வாய்க்கிழமை (08) தெரிவித்தார்.

பறவைகள் சாரணாலயத்தை ஏற்படுத்துவதற்காக இப்பகுதியின் நன்னீர் அணைக்கட்டு ஒன்று கட்டப்பட்டு, நன்னீர் சேகரிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.

அதன் பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் மரநடுகை தினத்தையொட்டி பாரியளவிலான மரங்களை நாவற்குழியில் நாட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நன்னீர் தேக்கி வைப்பதன் மூலம் அதில் மீன்கள் வளர்க்கப்படும். மீன்களை உண்பதற்காகவும், நாட்டப்படும் பாரிய மரங்களில் தங்குவதற்காகவும் பறவைகள் இப்பகுதிக்கு அதிகளவில் வருகை தரும்.

இப்பகுதியில் முன்னர் இயங்கி கைவிடப்பட்ட உப்பு உற்பத்தியானது இனிவருங்காலங்களில் மேற்கொள்ளப்படாது. நாவற்குழி பகுதியின் நன்னீர் உற்பத்தியை பாதுகாக்கும் வகையில் உப்பளம் மீண்டும் இயங்க அனுமதிக்கப்படமாட்டாது என்றார்

Related Posts