Ad Widget

நாவற்குழியில் தமிழ் மக்களை புறக்கணித்து சிங்களவர்களுக்கு காணிகள்!

home_navatkuliஎங்கள் மண்ணில் வந்து குடியேறியுள்ள சிங்கள மக்களுக்குக் காணிகளை அளந்து கொடுத்துள்ள அதிகாரிகள், நான்கு வருடமாக இதே மண்ணில் இருக்கும் எங்கள் காணிகளை அளந்து வழங்காமல் புறக்கணிப்பது ஏன்?

இவ்வாறு நாவற்குழி ஐயனார் கோயிலடிப் பகுதியில் அமைந்துள்ள புதுக்குடியேற்றத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாவற்குழியில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் காணியில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் அங்கு நிரந்தர வீடுகளை அமைத்துள்ளனர். இந்தக் குடியேற்றத்தில் 3 குடும்பங்கள் மட்டுமே நிரந்தரமாகத் தங்கியுள்ளன.

இந்த நிலையில் சிங்கள மக்கள் தங்கியுள்ள காணிகளை அளவீடு செய்து அவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் கடந்த ஒரு வாரகாலமாகச் சீருடையினரின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டன.

3 குடும்பங்கள் அங்கு நிரந்தரமாகத் தங்கியுள்ள நிலையில் 136 குடும்பங்களுக்குக் காணிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த புதுக்குடியேற்றத் திட்ட தமிழ் மக்கள், கடந்த 4 வருடங்களாக தங்கியுள்ள தமக்கு இன்னமும் காணி அளவீடு செய்து தரப்படவில்லயென்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.

“எங்களைக் காணிகளைத் துப்பரவு செய்யுமாறும் சிங்கள மக்களுக்குக் காணிகள் அளந்து முடிந்ததும் எங்களுக்கு அளந்து தரப்படும் என்று இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர். ஆனால் சிங்கள மக்களின் காணிகள் அளந்து வழங்கப்பட்டுவிட்டன. எங்கள் காணிகளை அளப்பதற்கு யாரும் வரவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக நாங்கள் தொழிலுக்குச் செல்லாமல் காத்திருக்கின்றோம்” என்று கூறினார்கள் அந்த மக்கள்.

இதேவேளை சிங்கள மக்கள் பிடித்துள்ள காணிகளுக்கு அருகில் தங்கியுள்ள 98 தமிழ்க் குடும்பங்களையும் வெளியேற்றுவதற்கு இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மக்கள் தெரிவித்தனர்.

எங்களுக்கான காணி உறுதிகள் இன்னமும் கிடைக்காமையால் எதுவித உதவிகளும் இல்லாமல் அந்தரித்த வாழ்வு வாழ்கின்றோம். தற்போது மழை தொடங்கிவிட்டது. ஒலைக் கொட்டில்களின் ஒழுக்கினால் நாம் வீட்டில் இருக்க முடியாமல் சிரமப்படுகிறோம்.

இரவில் பாம்புத்தொல்லை என்பதால் மின்சாரத்துக்கு விண்ணப்பித்தோம் காணி உறுதி இல்லாததால் எங்களுக்கு மின்சாரம் வழங்க மறுக்கின்றனர். இதனால் சட்டவிரோத மின்சாரம் எடுக்க வேண்டி ஏற்படுகிறது. இவ்வாறு செய்தால் நாங்கள் கைது செய்யப்படுகிறோம். சிங்கள மக்கள் சட்டவிரோத மின்சாரம் பெறுவதை யாருமே கண்டு கொள்வதில்லை என்று தமிழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

“நாங்கள் எங்கள் சொந்த மண்ணில் அடிப்படை வசதிகளின்றி வாழ, சிங்களவர்கள் எங்கள் மண்ணில் குடியேறி எல்லா வசதிகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். ஏன் இந்தப் பாகுபாடு காட்டப்படுகின்றது” என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதேவேளை இந்த விடயங்கள் தொடர்பில் தென்மராட்சி பிரதேச செயலருடன் தொடர்புகொண்டு கேட்டபோது, மக்களுக்குக் காணி உறுதி வழங்கப்படாமல் எங்களால் உதவிப்பொருள்கள் வழங்க முடியாது என்று தெரிவித்தார்.

Related Posts