Ad Widget

நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை!!

இலங்கையில் பதிவாகும் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2000 க்கு மேற்பட்டதாக அதிகரிக்கக்கூடும் என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானியும் விசேட வைத்தியருமான சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர மேலும், தெரிவிக்கையில் கடந்த ஒருவார காலமாக நாளாந்தம் எமக்கு பதிவான வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1500 இல் இருந்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். இதில் வைத்தியசாலைகளுக்கு பாரிய பொறுப்பு உண்டு. கடந்த சில தினங்களாக அதிகரித்த நோயாளர்களின் எண்ணிக்கையை நாம் அவதானித்தோம். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய நிலை உண்டு. சில வேளைகளில் இந்த எண்ணிக்கை 2000 த்திலும் பார்க்க அதிகரிக்கும் நிலை உண்டு. தற்போதை இந்த நிலை எவ்வாறு மாற்றமடையும் என்பதை எதிர்வரும் தினங்களில் அறிந்துகொள்ள முடியும். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு என்றும் தெரிவித்தார்

ஒன்று சுகாதார கட்டமைப்பு என்ற ரீதியில் விரைவாக தொற்றாளர்களை அடையாளங்கண்டு நோயாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதித்தல் அல்லது இடைப்பட்ட சிகிச்சை நிலையங்களில் அனுமதித்தல் அல்லது ஏனையவர்களிடமிருந்து தனிமைப்படுத்துவதா அல்லது நோயாளர்களை விரைவாக அடையாளங்கண்டு தனிமைப்படுத்தி நோயை அடையாளங்காண்பதா என்பது ஒருபுறத்தில் தீர்மானிக்கப்படும்.

மறு புறத்தில் இந்த நோய் பரவுவதை தடுப்பதற்காக பொதுமக்கள் சார்பில் வழங்கப்படும் பங்களிப்பின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படும் என்றும் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

தற்போது நோயாளர்கள் பதிவாவதினால் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பற்காக வார்ட்டுக்களை ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கம் அனைத்து பிரதான வைத்தியசாலைகளுக்கும் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இவ்வாறான ஏற்பாடு இருக்கவில்லை. முன்னர் இவ்வாறான நோயாளிகளை விசேட வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொண்டோம். தற்போது நோயாளர்கள் பெரும் எண்ணிக்கையில் அடையாளம் காணப்படுவதினால் அதனை முகாமைத்துவம் செய்ய வேண்டியுள்ளது.

இதனால் கொரோனா நோயாளி வைத்தியசாலைக்கு வந்தால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை செய்யுமாறு வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவுகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தொற்று நோயியல் பிரிவின் பிரதானியும் விசேட வைத்தியருமான சுதத் சமரவீர மேலும் தெரிவித்தார்.

Related Posts