Ad Widget

நாம் விட்ட பணிகள் அடுத்துவரும் புதிய அரசில் தொடரும் – டக்ளஸ்

சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவங்களைப் பாதிக்காத வகையிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்த பாதிப்புக்களை ஈடுசெய்யும் வகையிலும் தேர்தல் சீர்திருத்தம் அமைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பொரளை, கொட்டா வீதி, கலாநிதி என்.எம்.பெரேரா நிலையத்தில் சிறுபான்மை இனக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கும் போது கூறியதாவது,

‘தேர்தல் ஒன்று அண்மித்துள்ள நிலையில், இந்த அரசு தமிழ் மக்களுக்கு எதையுமே செய்யவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முனுமுனுத்து வருகின்றனர். இது அவர்கள் வழமையாகக் கையாளும் விடயமாகும். தற்போதைய ஆட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கெடுத்துவரும் நிலையில், இந்த அரசின் வேலைத்திட்டங்களை தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே உரியது.

நாம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது எமது பலத்திற்கு உட்பட்ட வகையில் எமது மக்களுக்கும், எமது பகுதிகளுக்கும் பாரிய பணிகளைச் செய்துள்ளோம். அதில் ஏதும் குறைபாடுகள் இருப்பின், அவை சுட்டிக்காட்டப்படும் நிலையில், எதிர்வரும் புதிய அரசாங்கத்தில் அப்பணிகளை நாம் செவ்வனே முன்னெடுப்போம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேல் யுத்தம் நிலவி வந்துள்ளதால், அங்கு இயற்கைக்கு மாறான இறப்புக்கள் மற்றும் குடியகழ்வுகள் என்பன இடம்பெற்றுள்ளன. தேர்தல் சீர்திருத்தத்தின் போது இவற்றை அவதானத்தில் கொண்டு தற்காலிக, விஷேட ஏற்பாடாக பிரதிநிதித்துவங்களின் எண்ணிக்கையில் ஈடு செய்யக்கூடியதான ஏற்பாடு தேவை’ என டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

Related Posts