Ad Widget

நாம் அரசியல் போராளிகள் – டக்ளஸ்

நாம் அரசியல்வாதிகள் என்பதற்கு அப்பால் அரசியல் போராளிகளாக இருந்து கொண்டு மக்களுக்கு கௌரவமான ஒளிமயமான வாழ்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்ற வகையில் திட்டங்களை வகுத்து அவற்றை செயற்படுத்தி வருகின்றோம். உரிமைக்கு குரலும் உறவுக்குக் கரமும் கொடுக்கும் எமது இணக்க அரசியல் ஊடாக, மக்களின் தேவைகள் இனம்காணப்பட்டு அவற்றுக்கு உரிய முறையில் தீர்வுகாணும் அதேவேளை, நீடித்த நிலையான அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதே நோக்கமாகுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் தெரிவித்துள்ளார்.

mani1

மானிப்பாய் கலாசார மண்டபத்தில் நேற்று (04) வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு, வலிகாமம் தென்மேற்கு விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த பிரதேச செயலர் பிரிவுகளுக்கு கீழுள்ள விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகளுக்கு விதை நெல்லுக்கான கொடுப்பனவுகளை வங்கிகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 2,000 வெங்காய செய்கையாளர்களுக்கு தலா 5,000 ரூபாய் நிதிவழங்கப்படவுள்ள அதேவேளை, விவசாய உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.

ஏற்கெனவே, பயிரழிவுகளுக்கான நட்டஈடுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு கிடைக்கப்பெறுகின்ற உதவிகள் ஊடாக விவசாயிகளும் மக்களும் தமது வாழ்வாதாரத்தை பாதுகாத்து பலப்படுத்த வேண்டும். மாகாணசபை என்பது காமதேனு பசு அல்லது சர்வரோக நிவாரணியாக உள்ள போதிலும் அதனை சரியாக நெறிப்படுத்தி வழிப்படுத்த தெரியாதவர்கள் பல்வேறு நொண்டிச் சாட்டுக்களை கூறி, எவ்விதமான அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.

நாம் அரசியல்வாதிகள் என்பதற்கு அப்பால் அரசியல் போராளிகளாக இருந்து கொண்டு மக்களுக்கு கௌரவமான ஒளிமயமான வாழ்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்ற வகையில் திட்டங்களை வகுத்து அவற்றை செயற்படுத்தி வருகின்றோம். நான் உங்களுடன் நின்று உங்களுக்காக சேவை செய்துவரும் அதேவேளை, நாம் காட்டும் பாதையை மக்கள் பின்பற்றும் பட்சத்தில் மேலும் முன்னேற்றத்தையும் மேம்பாட்டையும் காணமுடியும். அதுமட்டுமன்றி நான் காட்டும் பாதையில் இடப்பெயர்வுகளோ, துன்ப துயரங்களோ, அழிவுகளோ இருக்க முடியாது. பதிலாக ஒளிமயமான கௌரவமான எதிர்காலத்திற்கே வழிவகுக்கும்.

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பிக்க வேண்டுமென்ற மாகாண சபை முறையானது சிறப்பானதாக இருந்த போதிலும் அதனை சரியான முறையில் செயற்படுத்த முடியாதவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இருக்கின்றனர்.

ஒருவருடமும் மூன்று மாதங்களும் கடந்துள்ள போதிலும் வடக்கு மாகாண சபையை கைப்பற்றிய அவர்களால் எவ்விதமான அபிவிருத்திகளையும் நடைமுறைப்படுத்த முடியவில்லையென்பதுடன் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிதியில் அரைவாசிக்கு மேலான நிதி திறைசேரிக்கு திரும்பியுள்ளதையும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதனிடையே குறித்த பிரதேச செயலர் பிரிவுகளில் வெங்காய செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதில் தாம் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தொடர்பில் அமைச்சர் அவர்களிடம் தெளிவுபடுத்தினர்.

இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் வெங்காய சங்கமொன்றை நிறுவி அதனூடாக அவர்களது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கும், விவசாயத்திற்கு ஏற்ற வகையிலான கிணறுகளை புனரமைப்பதற்கும் நடவடிக்கை துரிதகதியில் முன்னெடுக்கப்படும்.

அத்துடன் கட்டாக்காலி கால்நடைகளால் ஏற்படும் பயிர் அழிவுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் அதற்கான திட்டங்கள் மற்றும் தேவைப்பாடுகளை தமது கவனத்திற்கு சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

சண்டிலிப்பாய் விவசாய சம்மேளனத்தின் செயலாளர் சர்வானந்தம் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி குகேந்திரன், ஈ.பி.டி.பியின் மானிப்பாய் பிரதேச இணைப்பாளர் ஜீவா, வலிகாமம் தெற்கு பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் அரிகரன், ஈ.பி.டி.பியின் வலி.தெற்கு பிரதேச இணைப்பாளர் வலன்ரைன், வலி.வடக்கு பிரதேச சபை எதிர்க்கட்சித்தலைவர் அன்பு ஆகியோர் உடனிருந்தனர்.

Related Posts