தமிழ்மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெறவேண்டுமாயின் நாமல் ராஜபக்ஷ ஆக்கபூர்வமாக முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்பதை காரணம் காட்டி தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை பெறாது இருக்க முடியாது என்பதை சம்பந்தன் ஐயா ஏன் உணரவில்லை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெளியிட்டிருந்த டுவிட்டர் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அரசியல் தீர்வு மூலமாகவே எமது மக்கள் பூரண சமாதானத்தையும் சமத்துவத்தையும் பெற முடியும். அதனால் அரசியல் தீர்வு விடயத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியது எமது கடமை என்று கருதுகின்றோம் அதற்காக ஏனைய விடயங்களில் நாம் கவனம் செலுத்தாது இருக்கின்றோம் என்று கூறுவது பொறுப்பற்ற பேச்சாகும்.
கைதிகள் விவகாரம், காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற விடயங்களில் அனைத்து வழிகளிலும் முயற்சித்து வருகின்றோம். இவை யாவும் முறையான பாதையில் நகர்கின்றன. இவை முழுமை பெறாது இருப்பதற்கு துவேசவாதிகளே காரணமாகின்றனர். பெரும்பான்மை மக்கள் மத்தியிலும், இராணுவத்தினர் மத்தியிலும் இனத்துவேசத்தை கிளறுவதே தீர்வுக்கு தடையாக அமைகின்றது.
எனவே பொறுப்பற்ற பேச்சில் ஈடுபடாமல் நியாயமான அரசியல் தீர்வு தொடர்பாகவும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் தமது நிதானமான ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்குவார்களாயின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு எட்டப்படுவதற்கு வாய்ப்பு உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.