Ad Widget

நான் வாழப்போகும் சில நாட்களாவது மகனுடன் வாழ விடுங்கள்!- முருகனின் தாய்!!

“முருகனின் நினைவோடே அவரது தந்தை மரணித்துவிட்டார். நான் வாழப்போகும் சில நாட்களாவது எனது மகனோடு வாழ வேண்டும் என ஏங்குகிறேன்” என தமிழக சிறையில் வாடும் முருகனின் தாயார் தெரிவித்துள்ளார்.

இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஈழத் தமிழரான முருகனின் தந்தையார் நேற்று அதிகாலை சாவகச்சேரி வைத்திசாலையில் காலமானார்.

பளை – இத்தாவில் பகுதியில் வசித்து வந்த முருகனின் தந்தையான வைரவப்பிள்ளை வெற்றிவேலு (வயது – 75), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில் தந்தையாரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில், தந்தையின் முகத்தைக் கடைசியாகப் பார்க்க வீடியோ அழைப்புக்கு முருகன் அனுமதி கோரியிருந்தார். எனினும், அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

ஆனால், முருகனின் தந்தை நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வைத்தியசாலையில் காலமானார்.

இந்நிலையில், தனது தந்தையின் உடலையாவது ஒரு முறை பார்க்க வீடியோ அழைப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலமாகச் சிறையில் உள்ள முருகனும் இலங்கையில் உள்ள அவரின் குடும்பத்தினரும் தமிழக அரசுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், தனது மகன் மற்றும் கணவர் குறித்து நேற்றுக் கருத்துத் தெரிவித்த முருகனின் தாயார், தனது மகனுடன் தன்னைச் சேர்த்துவிடும்படி கைகூப்பிக் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் கூறியவை வருமாறு –

“29 வருடங்களாக தமிழக சிறையில் வாடும் மகனின் நினைவுடனே ஏங்கிக்கொண்டிருந்த தந்தையின் ஏக்கம் அவரது மரணத்துடன் முடிந்துவிட்டது.

நானும் நோய் வாய்ப்பட்டுள்ளேன். எனவே, நான் வாழப்போகும் சிறிது காலத்துக்கேனும் எனது மகனுடன் வாழ விரும்புகிறேன்.

இதற்கு இந்திய அதிகாரிகள் உட்பட அனைவரும் கைகொடுக்கவேண்டும் என கைகூப்பிக் கேட்கிறேன் “என்றார்.

Related Posts