Ad Widget

நான் தமிழ் என்பதால் இந்த நிலையா? அமைச்சராக இருப்பதில் பயன் இல்லை: இராதாகிருஸ்ணன்

கல்வி அமைச்சில் அதிகார பகிர்வு எதுவுமே இல்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

எங்களுடைய கல்வி அமைச்சில் அனைத்து அதிகாரிகளும் அசமந்த போக்குடனேயே செயற்படுகின்றார்கள். குறிப்பாக பொது மக்களை அழைக்களிப்பதில் இவர்களை போல செயற்பட முடியாது.

அரசாங்க வர்த்தமாணி மூலம் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும் அது எதுவுமே செயற்படுத்த முடியாமல் இருக்கின்றது. எங்களுடைய அமைச்சரும் இதனை கண்டு கொள்வதில்லை. இது தொடர்பாக நான் பலமுறை அவருடைய கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றேன்.

அதே போலவே அதிகாரிகள் அசமந்த போக்குடனேயே செயற்படுகின்றார்கள். நான் ஒரு தமிழ் அமைச்சராக இருக்கின்ற காரணத்தால் இவ்வாறு செயற்படுகின்றார்களா? என்ற கேள்வியும் எனக்கு எழுகின்றது.

எங்களுடைய மக்களுக்கு சேவை செய்ய முடியாவிட்டால் நான் இராஜாங்க அமைச்சராக இருப்பதில் எந்தவிதமான பயனும் இல்லை. கடந்த காலங்களில் பல போராட்டங்களுக்கு மத்தியிலேயே பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தேன் எனினும் தொடர்ந்து அவ்வாறு செய்ய முடியாது.

சிறுபான்மை மக்களின் ஆதரவோடு அமைக்கப்பட்ட இந்த நல்லாட்சி அரசாங்கம் கட்டாயமாக சிறுபான்மை மக்களை கவனத்தில் கொள்ளாவிட்டால், கடந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமை இந்த அரசாங்கத்திற்கும் ஏற்படும்.

இந்த நிலை தொடர்ந்தால் எம்முடைய கல்வி நடவடிக்கைகள் பாரிய அளவு பாதிக்கப்படும் இனியும் இதனை அனுமதிக்க முடியாது என இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts