Ad Widget

நான் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வேன். கலந்து கொண்டு விட்டு மக்களிடம் போவேன். தேர்தலில் நிற்பேன். ஜெயிப்பேன் – சுமந்திரன்

நெல்லியடிக் கட்சிக் கூட்டத்தில் ஒரு பெரியவர் எழுப்பிய கேள்வியும், திரு. சுமந்திரன் அளித்த பதிலும்:

sumantheran

கேள்வி: “சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டது சரியா? அதை இன்றும் நியாயப்படுத்துகின்றீர்களா?”

திரு. சுமந்திரன்: “<சிரித்துக் கொண்டு> இந்தக் கேள்வி வரும் என்று தெரியும். இன்றுவரை நானும், சம்பந்தன் ஐயாவும் செய்தது சரியென்றே கூறுகிறேன். சம்பந்தன் ஐயா 1970களில் இருந்து சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளாதவர். தமிழர் தரப்பு சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்று முன்னின்று உழைத்தவர்.

இந்த முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து சுதந்திர தின நிகழ்விற்கு அழைப்பு வந்த போது, சம்பந்தன் ஐயா இம்முறை தான் இந்த விழாவில் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறினார். ஆரம்பத்திலேயே இந்த சுதந்திர தின நிகழ்வு ஏனைய சுதந்திர தின நிகழ்வுகளில் இருந்து மாறுபட்டதாக இருக்கும் – அதாவது, போர் வெற்றியைப் பறை சாற்றுவதோ, அல்லது பேரினவாதத்தைப் போற்றுவதாகவோ அல்லாமல் சமாதானத்திற்கான அறைகூவல் விடுக்கப்படும் – என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

நானும் செல்வதாக முடிவெடுத்தேன் – நானும் இதற்கு முன்னர் எந்தத் தடவையும் சென்றதில்லை. இது குறித்துக் கட்சியின் பாரளுமன்றகூட்டத்திலே கலந்துரையாடப்பட்டது. அதிலே ஒருவரைத் தவிர இதற்கு வேறு யாரும் எதிர்ப்புச் சொல்லவில்லை. பொதுத் தேர்தல் வருகின்றது என்பதும் எனக்குத் தெரியும். நான் மீண்டும் ஒரு தடவை பாராளுமன்றத்திற்கு தேசியப் பட்டியலில் வரப்போவதில்லை என்றும் யாழ் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தேர்தலில் களம் இறங்குவேன் என்றும் ஏற்கனவே முடிவெடுத்திருந்தேன்.

சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி நடந்தேறிய போரினை ‘கொடூர யுத்தம்’ என்று வர்ணித்திருந்தார். இரு தடவைகள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். ‘போரினை வென்றாலும் மக்களைத் தோற்றுவிட்டோம்’ என்று தொனிப்பட உறுதியான கருத்துக்களை முன்வைத்தார்.

போரில் இறந்த அத்தனை பேருக்கும் பொதுவான நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அடையாள ரீதியாக – பூரணமாகவோ, பூரண நல்லெண்ணத்துடனோ அல்ல – ஜனாதிபதி தமிழர் தரப்பை நோக்கி கை நீட்டினார். சர்வதேச சமூகத்தின் உன்னிப்பான அவதானிப்பின் கீழ் நடைபெற்ற அந்த நிகழ்வில் அடையாள ரீதியாக தமிழர் தரப்பு பதில் கை நீட்ட வேண்டிய தேவை இருந்தது.

அப்படிச் செய்யாமல் விடுவது எம்மை கடும் போக்காளர்களாகச் சித்தரிக்கும். அரசியல் என்பது நாலு பேருக்கு இரத்தம் கொதிக்க மேடையில் பேசுவது மாத்திரமல்ல. நானும் சம்பந்தன் ஐயாவும் இதனால் தான் அங்கு சென்றிருந்தோம்.

நான் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளப் போகின்றேன் என்று அறிந்த ஊரவர், என் நண்பர் ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். ‘என்ன சுமந்திரன் சுதந்திர தின விழாவிற்குப் போகப் போறீராமே? நீர் நில்லும், சம்பந்தன் ஐயாவை மட்டும் அனுப்பும். தேர்தல் வரப் போகுது. வீண் விமர்சனங்களைத் தேடிக் கொள்ள வேண்டாம்’ என்றார்.

நான் கூறிய பதில் இதுவே:

“நான் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வேன். கலந்து கொண்டு விட்டு மக்களிடம் போவேன். தேர்தலில் நிற்பேன். ஜெயிப்பேன்.”

இவ்வாறு அவ் பெரியவருக்கு திரு சுமந்திரன் அவர்கள் பதில் வழங்கியுள்ளார்.

Related Posts