Ad Widget

நாட்டை முடக்க முடியாது: நடைமுறைகளைப் பின்பற்ற மக்கள் பழக்கப்பட வேண்டும்- ஜனாதிபதி

நாட்டை முடக்காமல், சுகாதார அறிவுறுத்தல்களை சரியாகப் பின்பற்றுவதற்கு மக்கள் பழக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பல்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், சுகாதார அறிவுறுத்தல்களை சரியாகப் பின்பற்றினால் எந்தப் பிரச்சினைகளும் இன்றி நாட்டை முன்கொண்டு செல்ல முடியும் எனவும் சரியான முறையில் முகக்கவசத்தை அணிதல், கைகளைக் கழுவுதல் போன்ற விடயங்களை மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஊரடங்குச் சட்டம் அமுலானால்தான் மக்கள் வீட்டுக்குள் இருக்கின்றார்கள் எனவும் ஆனால், மக்கள் இந்த விடயத்தை அவதானமாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், நாளாந்தம் உழைத்து வாழ்கின்றவர்கள் தொடர்பாக நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாட்டை முடக்கினால் அவ்வாறான நாளாந்த உழைப்பாளர்கள் மீண்டும் தங்களது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதற்கு பல வருடங்கள் செல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியானாலும், அமைச்சர்களானலும் யாராக இருந்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து தற்போது ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாட்டை முடக்க முடியாது எனவும் பாடசாலைகளை இலகுவதாக மூடுவதற்கு உத்தரவிட முடிந்தாலும் பாடசாலைகளை மூடிவைப்பதன் மூலம் ஏற்படுகின்ற விளைவுகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related Posts