Ad Widget

நாட்டில் விஷவாயுத் தாக்குதல் நடக்கலாம் – மஹிந்த

எதிர்வரும் தினங்களில் நாட்டில் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் உலாவிவருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்நேற்று (வெள்ளிக்கழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “வரும் திங்கட்கிழமை சிறுவர்களுக்கான பாடசாலைகள் ஆரம்பமென அரசு அறிவித்துள்ளது. ஆனால் அன்று தாக்குதல்கள் நடக்கலாம் என்று புலனாய்வுத்துறை சொல்கிறது. நான்கு மில்லியன் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமை.

ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு உண்மைகளை வெளியே சொல்லாமல் விதிக்கப்படும் தடை. ஒரு பக்கம் பாதுகாப்பு ஏற்பாடு என்றாலும் மறுபக்கம் இதனால் மக்கள் அரசை நம்பாத நிலை உள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை நடத்தும் பாதுகாப்புத் தரப்புக்கு அரசியல் தலையீடுகள் எதுவும் இருக்க கூடாது. குற்றம் செய்தவர்கள் கட்டாயம் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.

சிறுவர்களுக்கான பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அரசு ஒரே குரலில் சொல்ல வேண்டும். 19ஆம் திருத்தத்துக்கு பின்னர் இப்போது இரு பிரிவுகளாக செயற்படும் அரசியல் தலைவர்கள் ஒரு நிலைப்பாட்டில் இருந்து உண்மையை சொல்ல வேண்டும்.

எதிர்வரும் திங்கள் தாக்குதல் நடக்கலாமென புலனாய்வுத்துறை சொல்கிறது. மறுபக்கம் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் நேற்று உலாவியது. உண்மையில் என்ன தான் நடக்கிறது. பாடசாலைகளுக்கு பிள்ளைகளை இன்னமும் பெற்றோர் அனுப்பாமல் இருப்பதற்கு அரசின் மீதான சந்தேகமே காரணம். மத்திய வங்கி மீதான தாக்குதல் மற்றும் விமான நிலைய தாக்குதல்களின்போது கூட மக்கள் இப்படி சந்தேகம் கொண்டிருக்கவில்லை.

நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை கட்டியெழுப்ப வேண்டும். நாட்டில் இந்த பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமென முஸ்லிம்களும் விரும்புகின்றனர். அதனை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்” என்று தெரிவித்தார்.

Related Posts