Ad Widget

நாட்டில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல் : 95 சதவீதமானோர் ஒமிக்ரோன் தொற்றாளர்கள்

நாடளாவிய ரீதியில் தற்போது அடையாளங்காணப்படும் கொவிட் – 19 வைரஸ் தொற்றாளர்களில் 95 சதவீதமானோர் திரிபடைந்த ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகியிருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ள சுகாதாரத்தரப்பினர், பாடசாலை மாணவர்கள் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரித்துவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை அண்மையகாலங்களில் நாளாந்தம் அடையாளங்காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பொன்று அவதானிக்கப்படும் நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன் அவர்களுக்கான சிகிச்சை வழங்கலுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரையான காலமும் கட்டுப்பாட்டிற்குள் இருந்த கொரோனா வைரஸ் பரவல் தற்போது மீண்டும் தீவிரமடைந்துவருகின்றது.

குறிப்பாகக் கடந்த மாதம் நாளாந்தம் அடையாளங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 350 – 400 இற்கு உட்பட்டதாகக் காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக அந்த எண்ணிக்கை 600 ஐக் கடந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள சுகாதார மேம்பாட்டுப்பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியநிபுணர் ரஞ்சித் பட்டுவன்துடாவ இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையில் முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளங்காணப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் கடந்துள்ளன. தற்போதைய தரவுகள் மூலம் நாடளாவிய ரீதியில் அடையாளங்காணப்படும் கொவிட் – 19 வைரஸ் தொற்றாளர்களில் 95 சதவீதமானோர் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகியிருப்பதை அறியமுடிகின்றது.

அதாவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளைப் பரிசோதனைக்குட்படுத்தும்போது அவற்றில் பெரும்பாலும் 95 சதவீதமான மாதிரிகளில் ஒமிக்ரோன் திரிபு அடையாளங்காணப்பட்டுள்ளது.

கொவிட் – 19 வைரஸ் திரிபுகள் தொடர்பான பரிசோதனைகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வுகூடத்தின் ஊடாகவே தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அதனூடாக வெளியிடப்பட்டுள்ள பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில் மேற்குறிப்பிட்டவாறான முடிவிற்கு வரமுடியும். இருப்பினும் அண்மையகாலங்களில் சுகாதார அமைச்சின் பரிசோதனை நிலையத்தின் ஊடாகவும் அத்தகைய அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் வெளியான அந்நிலையத்தின் அறிக்கையிலும் 96 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கண்டறியப்படும் தொற்றாளர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகியிருப்பதாகக் கூறமுடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts