நாட்டில் ஜனநாயக ஆட்சியா அல்லது இராணுவ ஆட்சியா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்!! – பிரதமர்

இராணுவ பாணியிலான ஆட்சி அதிகாரம் நாட்டில் உருவாகுவதற்கு இடமளிக்கக் கூடாது என ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் நவீன் திஸாநாயக்க, கடமைகளை பொறுப்பேற்றார். குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த பிரதமர், ”நாட்டில் மீண்டும் ராஜபக்ஷ ஆட்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் ஜனநாயக ஆட்சியா அல்லது இராணுவ ஆட்சியா ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர ஊடகவியலாளர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால், அடுத்த தேர்தலில் ராஜபக்ஷ வெற்றிபெற்றால், ஆதரவளித்த ஊடகவியலாளர்கள் காணாமலாக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்வர்” என்றும் குறிப்பிட்டார்.

Related Posts