Ad Widget

நாட்டில் அமுல்படுத்தப்படும் பயணத்தடை, நடமாட்டத்திற்கான தடைகள் குறித்து தெரிந்துகொள்க!

நாட்டில் தற்போதுள்ள கொவிட்-19 பரவல் தீவிர நிலைமையைக் கருத்திற் கொண்டு விசேட போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை நாடளாவிய ரீதியில் முழுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகளும், நேற்று புதன்கிழமை முதல் மே 31 ஆம் திகதி வரை இரவு நேர கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இன்று வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17) அதிகாலை 4 மணிவரை நாடளாவிய ரீதியில் முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனினும் இதன்போது அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்க முடியும் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை நேற்று புதன்கிழமை முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இரவு நேர போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய நேற்று முதல் அமுலாகும் வகையில் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய எந்த தேவைகளுக்கும் அனுமதியளிக்கப்படமாட்டாது எனவும் இராணுவத்தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும இரவு நேர பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கின்ற காலப்பகுதியில், அதாவது இன்று முதல் 31 ஆம் திகதி வரை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு ஏற்பவே மக்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப் பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பிலும் இதன்போது அத்தியாவசிய சேவைகள் , ஏனைய விடயங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இவை தொடர்பில் தெளிவுபடுத்துகையில் ,

பயணிக்க அனுமதி பெறுபவர்கள்

போக்குவரத்து கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதிகளில் , அத்தியாவசிய செயற்பாடுகள் வழமைப் போன்று இடம்பெறும். அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் பணிக்கு செல்ல முடியும். சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு செல்பவர்களுக்கும் தடை விதிக்கப்படமாட்டாது.

அடையாள அட்டை இலக்கத்திற்கமையவே அனுமதி

பொருட்கள் கொள்வனவு உள்ளிட்ட ஏனைய தேவைகளுக்காக செல்பவர்கள் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு ஏற்பவே வெளியில் செல்ல முடியும்.

அதற்கமைய தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் ஒற்றை எண்ணில் நிறைவடைந்தால் , அதாவது 1, 3, 5, 7, 9 ஆகிய இலக்கங்களை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமாகக் கொண்டவர்கள் ஒன்றை எண் வரும் திகதியிலேயே வெளியிடங்களுக்குச் செல்ல முடியும். (அதாவது 13 , 15 போன்ற திகதிகளில்)

இதேபோன்று 2, 4, 6, 8 மற்றும் பூச்சியத்தை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமாகக் கொண்டவர்கள் இரட்டை எண் வரும் திகதியிலேயே வெளியிடங்களுக்குச் செல்ல முடியும். (அதாவது 14 , 16 போன்ற திகதிகளில்) அதற்கமைய இறுதி இலக்கத்தை ஒற்றை எண்ணாக கொண்டவர்கள் வெளியில் செல்லும் திகதி ஒற்றை எண்ணிலும் , இறுதி இலக்கத்தை இரட்டை எண்ணாக கொண்டவர்கள் வெளியில் செல்லும் திகதி இரட்டை எண்ணிலும் அமைய வேண்டும்.

எனினும் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்களது கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தை இதற்காக பயன்படுத்த முடியும்.

இதன்போது தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு இரண்டையும் வைத்திருப்பவர்கள் அதனை முறைக்கேடாக பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு எவரேனும் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

நிறுவனங்கள்

இந்த காலப்பகுதியில் நிறுவனங்கள் சுகாதார சட்டவிதிகளை கடைப்பிடிப்பதுடன் , தங்களது ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிப்புரிவதற்கான வசதிகளை செய்துக் கொடுக்க முடியும்.

பெருமளவானோரைக் கொண்ட கலந்துரையாடல்கள் , கூட்டங்கள் என்பவற்றை நடத்த கூடாது. எனினும் சமூக இடைவெளி சட்டவிதிக்கமைய 10 பேரை மாத்திரம் கொண்டு இவற்றை நடாத்தலாம். அல்லது இணைவழியூடாக ஊடாக கூட்டங்களை நடத்தலாம்.

பல்பொருள் அங்காடிகள் , சேவை நிலையங்கள் மற்றும் சிகை அழங்கார நிலையங்களில் 25 சதவீதமானவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்க வேண்டும். சந்தைகள் , வர்த்தக நிலையங்கள் , நிதி நிலையங்களிலும் இந்த விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். விவசாய செயற்பாடுகள் வழமைப்போன்று இடம்பெறுவதுடன் , நீதி மன்ற செயற்பாடுகளிலும் 25 வீதமானோரே அனுமதிக்கப்பட வேண்டும். இவை அனைத்திலும் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும்.

ஏனைய தளங்கள்

பாடசாலைகள், மேலதிக வகுப்புகள் , சிறுவர் பூங்காக்கள், நீச்சல் தடாகங்கள் மூடப்பட்டிருக்கும். எரிபொருள் நிலையங்கள் , கட்டுமான பணிகள் வழமைப்போன்று சுகாதார சட்டவிதிகளுக்கமைய செயற்பட முடியும். சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் சுகாதார சட்டவிதிகளுக்கமைய செயற்பட முடியும்.

மதுபான விற்பனை நிலையங்கள் காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரையில் திறந்திருக்க அனுமதியுள்ளது. சூதாட்ட நிலையங்கள் , களியாட்ட நிலையங்கள் மற்றும் மசாஜ் சிகிச்சை நிலையங்கள் இந்த காலப்பகுதியில் செயற்படுவதற்கு அனுமதியில்லை.

நிகழ்வுகள்

விருந்துபசாரங்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்த முடியாது. எந்தவொரு சுற்றுலா பயணங்களும் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது. மரண சடங்குகள் 24 மணித்தியாலயத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். இவற்றுக்கு 15 பேர் மாத்திரமே கலந்துக் கொள்ள முடியும்.

திருமண நிகழ்வுகளை நடாத்த அனுமதி இல்லாத போதிலும் , பதிவு திருமணம் செய்துக் கொள்பவர்கள் 15 பேருடன் மட்டுப்படுத்தப்பட்டவாறு அதனை செய்ய முடியும். ஆலயங்கள் , பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் விகாரைகளில் மக்கள் ஒன்றுக் கூடலுடன் வழிபாடுகளில் ஈடுபடமுடியாது.

நடந்து செல்லவும் அனுமதி இல்லை

போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய தேவை இன்றி எந்தவொரு வாகனமும் பயணிக்க முடியாது. இதன்போது நடந்து செல்வதற்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது. இந்த சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுப்பர்.

மாகாண எல்லை பகுதிகளில் குறுக்கு வீதிகளில் செல்ல முற்படும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தகைய நபர்கள் 30 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றாளர்கள் வீட்டிலேயே வைத்து கண்காணிப்பு

இதேவளை எதிர்வரும் திங்கட் கிழமை (17) முதல் PCR பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு எவ்வித நோய் அறிகுறியும் இல்லாத சந்தர்ப்பத்தில் அவரை வீட்டிலேயே வைத்து கண்காணிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

பின் அவருக்கு நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர் வைத்தியசாலைக்கு மாற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts