Ad Widget

நாட்டினை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரும் செயற்பட வேண்டும் – யாழில் மோடி

இந்த வீடுகள் வெறும் செங்கற்களாலோ அல்லது சுவர்களாலோ அமைக்கப்பட்டது அல்ல. உங்களின் வளர்ச்சியில் செல்வதற்கும் இலங்கை மக்களின் துயரங்களை நீக்கக்கூடியதும் யாழ்ப்பாணத்தில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையினை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே அமைக்கப்பட்டுள்ளன என இந்திய பிரதமர் மோடி தெரிவித்தார்.

modi-kiremalai

யாழ்ப்பாணத்திற்கான விஜயம் கொண்ட இந்திய பிரதமர் கீரிமலை கூவில் பகுதியில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வைபவ ரீதியாக பயனாளிகளிடம் கையளித்து உரையாற்றியிருந்தார்.

அதன்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். எங்களில் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். சிலர் இறந்துவிட்டார்கள் ஆனாலும் படைக்கப்பட்ட இந்த வானத்தின் கீழ் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

இன்று பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இன்று இந்த வீட்டினை பயனாளிகளிடம் கையளிப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நான் பாக்கியமாகவே கருதுகின்றேன். வீட்டுத்திட்டத்தை வழங்குவதன் மூலம் இங்கு பாதிக்கப்பட்ட மக்கள் அபிவிருத்தி அடைவார்கள் .

இதேபோல் குஜராத் பூகம்பம் ஏற்பட்டதற்கும் இலங்கையில் சுனாமி ஏற்பட்டதற்கும் இந்த வீட்டுத் திட்டங்களை நாம் அமைத்து கொடுத்துள்ளோம்.

இந்த வீடுகள் வெறும் செங்கற்களாலோ அல்லது சுவர்களாலோ அமைக்கப்பட்டது அல்ல. உங்களின் வளர்ச்சியில் செல்வதற்கும் இலங்கை மக்களின் துயரங்களை நீக்கக்கூடியதும் யாழ்ப்பாணத்தில் உள்ள பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையினை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

நான் திறந்து வைத்த வீட்டின் குழந்தையினை எதிர்காலத்தில் என்னவாக வர விரும்புகின்றாய் என்று கேட்டேன். அவன் ஆசிரியராக வருவேன் என்றான். இந்திய அரசு வீடுகளை கட்டிகொடுத்தாலும் அந்த குழந்தை ஆசிரியாகி இங்குள்ள பலரை ஆசிரியர்களாக உருவாக்கும்.

எனவே இவ்வாறான செயற்பாட்டின் ஊடாக இந்த நாட்டினை மிகவும் வளர்ச்சிப்பாதையில் கட்டியெழுப்பிச் செல்ல சிறந்த மார்க்கமாகும்.

இந்த வீட்டில் வாழ்பவர்கள் அனைவரும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டு உங்கள் கனவுகளையும் அடைந்து நாட்டை அபிவிருத்தி அடையும் வகையில் செயற்படுவீர்கள் என்று நம்புகின்றேன்.

எமது 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் தற்போது 20 ஆயிரம் வீடுகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன. எனினும் அனைத்து வீடுகளையும் பூர்த்தி செய்வோம் என இந்த நேரத்தில் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன் குறித்த திட்டத்தில் 400 வீடுகள் மத்திய , ஊவா பிரதேசங்களில் அமைக்கப்படும். மேலும் யாழ்ப்பாண மக்களதும் இலங்கை வாழ் மக்களது பாதுகாப்பும் சிறந்த முறையில் இருக்க வேண்டும்.

அத்துடன் அபிவிருத்தியும் சிறந்த முறையில் ஏற்பட வேண்டும். இலங்கையில் இது எனது இறுதி நிகழ்வு இது எனக்கு மிகவும் கண்ணீரை வரவழைக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது என்றார்.

Related Posts