Ad Widget

நாடு முழுவதும் மழையுடனான காலநிலை அதிகரிக்கும் சாத்தியம்!!

நாட்டில் இன்று மழையுடனான காலநிலை ஓரளவு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் அதே வேளையில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்.

வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும். கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காற்று வடகிழக்கு திசையில் வீசும், காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ. மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Related Posts