Ad Widget

நாடாளுமன்ற விதிகளே எதிர்க்கட்சித் தலைவரைத் தீர்மானிக்கும்! பதவியை ஏற்க அழைப்புக் கிடைத்தால் பரிசீலிப்போம்!!

“நாடாளுமன்ற விதிமுறைகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலைமை வருமானால் அந்தப் பதவியை நாம் ஏற்பதா, இல்லையா என எமது கட்சி கூடி ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

sambanthan 1_CI

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசு அமைத்துள்ள நிலையில் சுதந்திரக் கட்சி ஆளும் கட்சியாக மாறிவிட்டது.

இந்நிலையில், நிமால் சிறிபால டி சில்வா ஆளும் கட்சியில் இருந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவர் அந்தப் பதவியில் தொடரமுடியாத நிலை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பலம் பொருந்திய கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்நிலையில், “ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய ஆதரவுக்கு நன்றிக்கடனாக நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிப் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி, சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்க மைத்திரி – ரணில் அரசு முயற்சிக்கின்றது” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்தால் சர்வதேசத்தில் கூட்டமைப்பின் கருத்துகளுக்குக் கூடிய வரவேற்பு கிடைக்கும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் அடுத்த பிரதமர் பதவிக்குச் சமமானவர் என்றும் அரசை அவர்கள் எச்சரித்தும் உள்ளனர்.

இதேவேளை, தானே எதிர்க்கட்சித் தலைவர் என்றும், இதனை எவராலும் மாற்றமுடியாது என்றும் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்தால் அந்தப் பதவியை தாங்கள் ஏற்பீர்களா என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியிடம் வினவியபோது அவர் தெரிவித்ததாவது:-

“எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாம் நாடவும் இல்லை அந்தப் பதவி வேறொரு கட்சியில் உள்ளவருக்குச் சென்றடையக்கூடாது என்று நாம் எண்ணவும் இல்லை. வேறொரு கட்சியில் உள்ளவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பொறுப்பேற்றால் அதனை நாம் எதிர்க்கவும் மாட்டோம்.

ஆனால், நாடாளுமன்ற விதிமுறைகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலைமை வருமானால் அந்தப் பதவியை நாம் ஏற்பதா, இல்லையா என்று எமது கட்சி கூடி ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும். எதிர்க்கட்சித் தலைவர் பதவி விடயத்தில் முன்னாள் அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கும் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோரின் தனிப்பட்ட கருத்துகளோ அல்லது கூட்டுக் கருத்துகளோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டா. நாடாளுமன்றத்துக்கென விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளே எதிக்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும். எனவே, தனிப்பட்டவர்களின் கருத்துகள் செல்லுபடியற்றதாகும்” – என்றார்.

Related Posts