Ad Widget

நாடாளுமன்றில் கூறப்படும் விடயங்களை விமர்சிக்க நீதிமன்றுக்கு அதிகாரமில்லை-சுமந்திரன் எம்.பி.

நாடாளுமன்ற சிறப்புரிமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறும் விடயங்களை விமர்சிப்பதற்கு நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை. அங்கு கூறும் கருத்துக்களை விமர்சனத்துக்கு உட்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத் தரணியுமான எம்.எ. சுமந்திரன் யாழ். நீதிமன்றில் நேற்றுச் சுட்டிக்காட்டினார். சுமந்திரன் நாடாளுமன்றில் கூறியதாக வெளியான செய்தி தொடர்பில் நீதிவான் மா.கணேசராஜா தெரிவித்த விமர்சனம் குறித்தே அவர் இப்படிச் சுட்டிக்காட்டினார்.

“அதையடுத்து அது சம்பந்தமாகத் தான் மன்னிப்புக் கோருகிறார் என நீதிவான் மா.கணேசராஜா தெரிவித்தமை அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. அதனைத் தான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று சுமந்திரன் தெரிவித்தார்.

வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ். நகர பஸ் நிலையம் முன்பாக நடத்தவிருந்த மக்கள் ஒன்று கூடல் நிகழ்வுக்கு யாழ். நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அந்தத் தடையை வாபஸ் பெறுமாறு அல்லது மாற்றியமைக்குமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பாட்டாளர்களது சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட நகர்தல் பத்திரம் மீதான விசாரணை நடந்த போது அங்கு சுமந்தின் இருந்தார்.

“நான் நடைமுறையில் தெரிவித்த கருத்துக்களை யாழ். நீதிமன்றில் நீதிவான் விமர்சித்ததாக அறிந்தேன். தான் இல்லாத சமயம் அவ்வாறு விமர்சிப்பது தவறானது. அதுபற்றி தெளிவுபடுத்தவும் தேவையேற்படின் மன்றுக்கு உதவவும் (இன்று) நேற்று வந்துள்ளேன். அதனைக் கூறுங்கள்” என சுமந்திரன் மன்றில் தெரிவித்தார்.

“ஆர்ப்பாட்டங்களை நடத்தும் போது பொலிஸார் முன்கூட்டியே நீதிமன்றினூடாக அதனைத் தடுத்து விடுகின்றனர். இவ்வாறான ஆர்ப்பாட்டங்களைத் தடுத்து நிறுத்தும் உரிமை நீதிவான் நீதிமன்றுக்குக் கிடையாது. மாவட்ட நீதிமன்றுக்கே உண்டு” என சுமந்திரன் நாடாளுமன்றில் கூறியிருந்தார் என வெளியான செய்தி தொடர்பிலேயே நீதிவான் கடந்த வெள்ளிக்கிழமை விமர்சித்திருந்தார் என்று கூறப்படுகின்றது.

“இது விடயத்தில் விமர்சிக்க நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை. தற்போது ஓய்வுபெற்றுள்ள உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூன்று பேர் இத்தகைய சம்பவங்களுக்காக முன்னர் நாடாளுமன்றுக்கு அழைக்கப்பட்டு மன்னிப்புக் கோரிய சம்பவங்களும் நாடாளுமன்ற சரித்திரத்தில் உண்டு” என சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

அதனையடுத்து நீதிவான், இது சம்பந்தமாக தான் மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்தார். இதே வேளை ஆர்ப்பாட்டங்களைத் தடுக்கும் நீதிமன்றங்களின் உரிமை குறித்து நாடாளுமன்றில் தான் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் சுமந்திரன் மன்றில் தெரிவித்தார்.

Related Posts