Ad Widget

நாடாளுமன்றம் விரைவில் கலைப்பு; தேர்தலை எதிர்கொள்ள ஓரணியில் திரளுங்கள்! – ஜனாதிபதி

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், அதை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஓரணியில் திரளவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

வெவ்வேறு திசையில் பயணித்தால் வெற்றி இலக்கை நோக்கி நகரமுடியாது எனவும் அவர் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல் வலுத்துவருவதால், கட்சி இரண்டாகப் பிளவுபடும் எனக் கூறப்பட்டுவரும் நிலையில், அதை தடுத்து கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை நேற்று கொழும்பில் சந்தித்து ஜனாதிபதி பேச்சு நடத்தினார்.

சு.கவின் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

நாடாளுமன்ற கலைப்பு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைபு ஆகிய விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் விரைவில் நாடாளுமன்றத்தைக் கலைக்கவேண்டியுள்ளதால், பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்குத் தயாராகுமாறு சு.க. உறுப்பினர்களுக்கு இதன்போது அழைப்பு விடுத்த ஜனாதிபதி, வெவ்வேறு திசையில் பயணிப்பதை விடுத்து ஓரணியில் திரளுமாறும் கோரிக்கை விடுத்தார். இதற்கு சு.க. உறுப்பினர்களுள் பெரும்பாலானோர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிலர் நாடாளுமன்றம் விரைவில் கலைவதைத் தாம் விரும்பவில்லை எனவும், அவ்வாறு கலைக்கப்படவேண்டுமானால் 20 நிறைவேறிய பின்னரே அதைச் செய்யவேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதியையும் இணைத்துக்கொண்டு பயணிக்கவேண்டும் எனவும் இச்சந்திப்பின்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி 20ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் மீது இரு தினங்கள் விவாதம் நடத்தப்பட்டு 26ஆம் திகதியன்று சட்டமூலம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ’20’ ஆவது திருத்தம் சாதாரண சட்டமூலமாக வருவதால், அதில் ஏதேனும் குறைப்பாடுகள் இருப்பின், எவருக்கேனும் உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யமுடியும். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் ’20’ ஆவது திருத்தம் நிறைவேறுவது தாமதமாகக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

எனினும், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் யோசனைகளை உள்வாங்கி 20ஐ சபையில் சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி உத்தேசித்துள்ளதால் அவ்வாறானதொரு நிலை ஏற்படாது என்றே சுட்டிக்காட்டப்படுகிறது.

20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சிறு மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் இன்று பேச்சு நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts