Ad Widget

நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்திற்காக எத்தகைய ஏமாற்று வேலைகளையும் செய்யக்கூடியவர்கள்தான் இன்றைய தலைவர்கள் – மணிவண்ணன்

நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்திற்காக எத்தகைய ஏமாற்று வேலைகளையும் செய்யக்கூடியவர்கள்தான் இன்று எமது தலைவர்களாகவுள்ளார்கள். இவர்கள்தான் கொள்கை, உரிமைக்காக போராடுவார்களா?

இவ்வாறு கேள்வியேழுப்பியுள்ளார் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்.
தனது கொள்கைக்காக நாடாளுமன்ற பிரதிநிதித்துகத்தை ஏற்காதவர்தான் மாமனிதர் சிவமகாராசா எனத் தெரிவித்தார்

கூட்டுறவாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் சின்னத்தம்பி சிவமகாராசாவின் நினைவு தினம் நேற்று தெல்லிப்பளை கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சட்டத்தரணி வி.மணிவண்ணன் மேலும் தெரிவித்ததாவது;

தெல்லிப்பழை என்று சொல்லும் போது முதலில் துர்க்கை அம்மன் ஆலயமும் தெல்லிப்பழை வைத்தியசாலையும் நினைவிற்கு வரும். மனிதர்கள் என்று கூறும் போது மாமனிதர் சிவமகாராசா மற்றவர் தங்கம்மா அப்பாக்குட்டி இவர்கள் மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள்.

இன்று நினைவு கூறுகின்ற சிவமகாராசா போன்றவர்கள் மக்களின் கொள்கை இலட்சியத்திற்காக இறுதி வரை உழைத்தவர். கூட்டுறவாளனான, நாடாளுமன்ற உறுப்பினராக நமது ஈழநாடு பத்திரிகையின் முகாமைத்துவப் பணிப்பாளர் என பல பண்புகளை திறமைகளை கொண்ட அவர், முதல் முறையாக நாடாளுமன்றம் தெரிவானபோது மக்களின் விடுதலைக்காக தனிநாடு கேட்டு போராடவேண்டும் என்றால் 6 ஆவது திருத்த சட்டத்தின்கீழ் சத்தியம் செய்து போராடமுடியாது என்பதற்காக தனது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தவர்.

இதன் மூலம் தனது கொள்கை – இலட்சியம் என்பவற்றில் எத்தகைய உறுதியுடன் இருந்தார் என்பது உறுதியாகின்றது. அதன்பின்னர் போட்டியிட்டபோது மக்கள் தெரிவு கிடைக்கவில்லை. பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாக போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டார். தெடர்ந்தும் மக்களுக்காகவே சேவை செய்து அதற்காகவே அவரது உயிரும் பறிக்கப்பட்டது.

மாமனிதர் சிவமகாராசா தனது கொள்கையில் உறுதியுடன் இருந்தமையால்தான் தனது முதல் தெரிவின் போது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறவில்லை. ஆனால் இன்றுள்ள எமது தலைவர்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைப்பதற்காக ஏமாற்றுவேலை செய்யக்கூடிய நிலையே உள்ளனர்.

மக்களின் உரிமை, தேசியம், கொள்கைக்காக போராடுபவர்கள் அதே கொள்கைக்காக போராடி எம்மை விட்டு பிரிந்தவர்களையும் நினைவு கூரவேண்டும். அவ்வாறு செய்வதே நாம் அவர்களுக்கு செய்யும் நன்றிகடனில் ஒன்றாகும் – என்றார்.

இன்றைய நினைவு நாளில் எத்தனை பேர் கலந்து கொண்டு மாமனிதரை நினைவு கூறுகின்றோம் என்றும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Related Posts