Ad Widget

நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க. தனிவழிப் பயணம்!

ஜனாதிபதித் தேர்தலின்போது கூட்டணி அமைத்து அன்னம் சின்னத்துக்கு ஆதரவளித்த பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களமிறங்குவதற்கு முடிவெடுத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் நேற்று அக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, அதற்கு உறுப்பினர்களின் பங்களிப்பு எவ்வாறு அமையவேண்டும், இது விடயத்தில் தொகுதி அமைப்பாளர்களின் கடப்பாடு, பிரசார வியூகம் உட்பட முக்கிய சில விடயங்கள் சம்பந்தமாக செயற்குழுக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதில் குறிப்பாக, பொதுத்தேர்தலுக்கு முன்னர் கட்சியின் மாநாட்டை பெருமெடுப்புடன் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டதுடன், வேட்புமனு குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்படவேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மீளவும் வலியுறுத்தியுள்ளது. தமது கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பது பற்றியும் நேற்றைய செயற்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் இருக்கும்போது, தான் பிரதான கட்சியாக இருந்தபோதிலும், கூட்டணி அமைத்து தனது கட்சியின் சின்னத்தில் அல்லாது பொதுச் சின்னமான வெற்றிலை சின்னத்திலேயே அது தேர்தல்களை எதிர்கொண்டுவந்தது. எனவே, தற்போதைய ஆட்சியில் பிரதான பங்கை வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் இம்முறை கூட்டணி அமைத்து ஜனாதிபதித் தேர்தலில்போல் அன்னம் சின்னத்தில் களமிறங்கும் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே மேற்படி சர்ச்சைக்கு ஐ.தே.க. நேற்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதாவது, தனது கட்சியின் சின்னமான யானை சின்னத்தில் அது களமிறங்கவுள்ளது. தனது கட்சியுடன் இணைந்து போட்டியிட விரும்பும் கட்சிகளை அது இணைத்துக்கொள்ளவுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலின்கீழேயே நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய கட்சிகளும் ஐ.தே.க. பட்டியலின்கீழ் களமிறங்கவுள்ளன.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி அமைத்து களமிறங்கிய ஐக்கிய தேசியக் கட்சி, அதன்பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தனித்துக் களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, ஜே.வி.பியும் இம்முறை தனித்தே களமிறங்கவுள்ளது. பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியும் தனிவழிப் பயணத்தை மேற்கொள்ளும் சூழ்நிலையே காணப்படுகிறது.

Related Posts