Ad Widget

நவாலிப் படுகொலையின் நினைவு நாள் இன்று

கணப்பொழுதில் 147 உயிர்களை காவுகொண்ட நவாலி படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

1995ஆம் ஆண்டு இதே நாளில், பலாலி ராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த இலங்கை ராணுவத்தினரால், வலிகாமம் மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் நடத்தப்பட்ட முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கையின் போது, விமானப்படையினரும் அதற்கு ஒத்தாசையாக குண்டுகளை கணக்கின்றி வீசினர்.

மக்கள் அல்லோக கல்லோலப்பட்டு தமது உயிரை காப்பாற்றிக்கொள்ள, தமது சொந்த இடங்களையும் உடைமைகளையும் கைவிட்டுவிட்டு பதைபதைத்து ஓடிச்சென்று நவாலி புனித பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி சின்னக் கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சம் புகுந்தனர்.

ஆனாலும் இலங்கை விமானப்படை அவற்றையும் விட்டு வைக்கவில்லை. புனித பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீதும், ஆலயத்தின் மீதும் சரமாரியாக குண்டுகளை வீசியெறிந்து ஒரே தடவையில் 147 உயிர்களை துடிதுடிக்க பலியெடுத்தனர்.

அன்று காலை முதல் வலி மேற்கு, தெற்கு பிரதேசங்களான அளவெட்டி, சண்டிலிப்பாய், மூளாய். பொன்னாலை என வடபகுதியின் நாலாபுறமும் பீரங்கித் தாக்குதல், ஷெல் தாக்குதல் என மக்களை கதிலகலங்க வைத்த தருணங்களை தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள்.

பார்க்கும் இடமெங்கும் இலங்கை படையினரின் துப்பாக்கி வேட்டு மற்றும் குண்டுச் சத்தங்களும், ஷெல், பீரங்கி தாக்குதலும் நடைபெற்றவண்ணமிருக்க, செல்வதற்கு இடமின்றி, நீரின்றி, ஆகாரமின்றி மக்கள் தவிதவித்த அந்த நாள், தமிழ் மக்களை பொறுத்தவரை அவர்களின் வாழ்வை சின்னாபின்னமாக்கிய கரிய நாட்களில் ஒன்றாகும்.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்றைய தினம் முதலுதவி வழங்கிய, உதவி செய்த தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களும் மனிதாபிமானமின்றி கொன்று குவிக்கப்பட்டனர்.

குறித்த இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழந்த தமது உறவுகளை நினைத்து, உருகி கண்ணீர் வடிப்பதை பார்த்தாலே அன்றைய கோரச் சம்பவம் எந்தளவு மோசமானதென்றும் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென்பதையும் உணரலாம்.

தமிழர்களது உரிமைப் போராட்டத்திற்காக முன்னெடுக்கபட்ட ஆயுதப் போராட்டத்தின்போது, அப்பாவி மக்களையும் பலியெடுத்ததன் மூலம் முடிவுறுத்தியிருந்தபோதும் – அவர்களது உயிர்கள் மண்ணோடு மண்ணாக்கப்பட்டபோதும் – தமது எதிர்பார்ப்பும் என்றோ ஒருநாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏக்கத்தோடு உலவும் அந்த ஆத்மாக்களுக்கு எமது அஞ்சலிகள்.

Related Posts