Ad Widget

நவக்கிரியில் ஏற்பட்ட நிலவெடிப்பு சுண்ணாம்பு பாறைகளில் உண்டாகும் உடைவு!

புத்தூர் நவக்கிரி பிரதேசத்தில் நேற்று காலை திடீரென ஏற்பட்ட நிலவெடிப்பு, நிலத்தின் கீழ் உள்ள சுண்ணாம்பு பாறைகளில் உண்டாகும் உடைவுகளால் ஏற்படும் தரை இறக்கமே என பேராதனை பல்கலைகழக புவியியல்துறை பேராசிரியர் வி. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நவக்கிரிப் பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை வீடொன்றிலும் தோட்ட நிலங்களிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டன.

இதனையடுத்து, பேராதனை பல்கலைகழக புவியியல்துறை பேராசிரியர் வி.நந்தகுமாரை தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் தரையின் கீழ் நீரோட்டங்களும் குகைகளும் காணப்படுகின்ற நிலையில், குழாய் கிணறுகள், ஆழமான கிணறுகள் அமைத்து அவற்றினூடாக நிலத்தடி நீர் அதிகமாக வெளியேற்றப்படுகின்றது.

இதனால் நிலத்தின்கீழ் நிலத்தடி நீரோட்ட இடைவெளி அதிகரித்து சுண்ணாம்பு பாறைகள் உடைவடைகின்றது.

அதன் காரணமாக மண் பிடிமானம் குறைவடைந்து இவ்வாறு நிலம் கீழ் இறங்குவதனாலே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பல சம்பவங்கள் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் மாத்தளை பகுதியிலும் 3 வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தச் சம்பவத்தில் பாரிய சத்தமொன்று ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளமை பேராசிரியரிடம் கேட்டபோது, நிலத்தின் கீழ் ஏற்படுகின்ற கற்பாறைகளுடைய வெடிப்பின் காரணமாக இவ்வாறு சத்தம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அனர்த்தங்களை தவிர்க்க வேண்டுமாயின் இயற்கைக்கு முரணான வகையில் நிலத்தடி நீரை அகத்துறிஞ்சுவதை நிறுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இல்லையேல் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

navkkerei-puththoor-3

navkkerei-puththoor-2

navkkerei-puththoor-1

Related Posts