Ad Widget

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கோலாகலமாக ஆரம்பமாகியது பனை அபிவிருத்திக் கண்காட்சி

வடமாகாண பனை அபிவிருத்தி வாரத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. ஒரு வாரம் நடைபெறவுள்ள இக்கண்காட்சியை வடமாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான த.குருகுலராசா நேற்று புதன்கிழமை (22.07.2015) ஆரம்பித்து வைத்துள்ளார்.

பனை தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்களும் பனை அபிவிருத்திச் சபையும் பதிநான்கு காட்சி அறைகளில் பனை உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்தியுள்ளன. பனை அபிவிருத்திச் சபையால் பனை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வுகளின் செயன்முறை விளக்கங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு வழங்கப்பட்ட சிற்றுண்டிகள் அனைத்தும் பனை உணவுகளாகவும் பானம் பனங்கட்டிக் கூழாகவும் இருந்தது அனைவரினதும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், விவசாய,கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், வே.சிவயோகன், பிரதம செயலாளர் அ.பத்திநாதன், ஆளுநரின் செயலாளர்எல்.இளங்கோவன், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மதுமதி வசந்தகுமார், பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் சோ.கோகுலதாசன் மற்றும் திணைக்கள அதிகாரிகள், பனை தென்னைவள அமைப்புகளின் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

அமைச்சர்கள், அவைத்தலைவர், மாகாணசபை உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றபோதும் இவர்கள் எவரும் உரையாற்றவில்லை. நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான விதிமுறைகள் காரணமாகவே அரசியல் பிரமுகர்களின் உரைகள் தவிர்க்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

palmyra exhibition (1)

palmyra exhibition (2)

palmyra exhibition (4)

palmyra exhibition (9)

palmyra exhibition (10)

palmyra exhibition (11)

palmyra exhibition (13)

மேலும் படங்களுக்கு..

Related Posts