வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குபேர (வடக்கு) வாசல் கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
காலை 6 மணியளவில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை அடுத்து கோபுரத்தில் உள்ள நவ கலசத்திற்கும் அபிஷேகம் செய்ய நவ கும்பங்கள் சிவாச்சாரியார்களின் மந்திர ஓதல்களுடனும் மங்கள வாத்தியங்களுடனும் கும்பங்கள் வெளி வீதி சுற்றி கொண்டுவரப்பட்டு நவதள கோபுரத்தில் உள்ள நவ கலசத்திற்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோபுரத்திற்கான கும்பாபிஷேகம் முடிவடைந்ததும் (வடக்கு) குபேர கோபுர வாசல் திறக்கப்பட்டு அதனூடாக ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் வெளி வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்ததுடன் வெளி வீதியுலாவும் வந்தார்.
கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்ததால் ‘கார்த்திகேயன்’ என்று பெயர் பெற்ற கார்த்திகை மைந்தனின் கார்த்திகை பெருவிழா இன்று என்பதுவும் குறிப்பிடத்தக்கது
இன்றைய குபேர (வடக்கு) வாசல் கோபுர கும்பாஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.